காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் சிலரை இஸ்ரேல் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 100க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
