வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கொட்டி தீர்க்கும் கனமழையால் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவி அறிவித்து வருகின்றனர். முன்னதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் ரூ.25 லட்சம், நடிகர் ஜூனியர் என்டிஆர் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ்பாபு மற்றும் பாலையா இருவரும் தலா ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.