90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். டில்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ராம்பன் சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் கொள்கைகளுக்கு இடையில்தான் மோதல். இந்திய வரலாற்றில் முதல்முறையாக மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது. மாநிலம் முதல்முறையாக யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. மாநிலத்தை அழித்து மக்களின் உரிமைகளை பறித்தனர். ஜம்மு-காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து மீண்டும் பெற்றுத் தர வேண்டும். ஏனென்றால், மாநில அந்தஸ்து மட்டும் பறிக்கப்படவில்லை, மக்களின் உரிமைகள், வளங்கள் என அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு மன்னர் ஆட்சி அகற்றப்பட்டு ஜனநாயக அரசு கொண்டுவரப்பட்டது. ஆனால், ஜம்மு – காஷ்மீரில் இன்று மன்னர் ஆட்சி உள்ளது. ஜம்மு-காஷ்மீர் ஆளுனர் தன்னை ஒரு மன்னர் போல நினைத்து செயல்படுகிறார். ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதே எங்கள் முதல் வேலை. தேர்தலுக்கு முன்னதாக மாநில அந்தஸ்து பெற்றுத் தர வேண்டும் என்றும், மாநில அந்தஸ்துடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம். ஆனால், பாஜகவுக்கு அது பிடிக்கவில்லை. மாநில அதிகாரத்தை குறைத்து, யூனியன் பிரதேசமாக மாற்றும் வேலையில் பாஜக ஈடுபடுகிறது. பாஜக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை இந்தியா கூட்டணி பெற்றுத் தரும்.” இவ்வாறு அவர் கூறினார்.