“என்னுடைய உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்புக்கூற வேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்த முஜிபுர் ரஹ்மான்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவரின் தேர்தல் பிரசாரத்தின் முன்னணி உறுப்பினர் ஒருவர் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருப்பதாக பொய் சாட்சியத்தை முன்வைக்க ஆளும் தரப்பு சூழ்ச்சி செய்து வருவதாக நாடாளுமன்றில் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசகர் மனுஷ நாணயக்கார சிறைச்சாலைக்குச் சென்று குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேகநபருக்கு சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்ததன் பேரில் தமக்கு எதிராக வாக்குமூலம் பெற முயன்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் செப்டெம்பர் 4 ம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான., முஜிபுர் ரஹ்மான் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“என்னுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டுமென நான் வெளிப்படையாகக் கூறுகின்றேன்,” என நாடாளுமன்ற உறுப்பினர் சபையில் தெரிவித்தார்.
“மூன்று நாட்களுக்கு முன்னர், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அஸ்லம் என்ற நபரும் வெலிக்கடை தடுப்புக்காவல் சிறைச்சாலைக்குச் சென்று ஐந்து வருடங்களுக்கு முன்னர் குற்றம் ஒன்றுத் தொடர்பிலான சந்தேகநபரை சந்தித்துள்ளனர். அவரை சந்தித்து கொழும்பில் வீடு ஒன்றை தருவதற்கு வாகனம் தருவதற்கு மற்றும் பணம் தருவதற்கும் வெளியில் வருவதற்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்து, எனக்கு எதிராக வாக்குமூலம் ஒன்றை தருமாறு கோரியுள்ளனர்.”
முன்னாள் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
“அந்த குற்றத்திற்கு, அவரை கைது செய்து ஐந்து வருடங்களாக தடுப்புக் காவலில் வைத்திருக்கின்றார்கள். அதனுடன் எனக்கும் தொடர்பு இருப்பதாக அவரிடம் வாக்குமூலம் ஒன்று கோரப்பட்டுள்ளது. இதுத் தொடர்பில், மனுஷ நாயணக்கார முன்னாள் அமைச்சர் அவரை சந்தித்தமை குறித்து என்னிடம் சாட்சியும் காணப்படுகின்றது.”
தனது உயிர் பாதுகாப்பு தொடர்பான ஆபத்தான நிலை குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் தமக்கு எதிராக சூழ்ச்சி இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
“இது மிகவும் பாரதூரமான நிலைமை. கடந்த காலம் முழுவதும் இந்த அரசியலில் விசேடமாக ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக முன்னிலையில் நின்று செயற்படும் உறுப்பினர் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். கொழும்பு நகரில் எங்கள் கட்சிக்காக நிறைய வேலைகளை செய்யும் உறுப்பினர் ஒருவர். ஆவே இன்று எனக்கு விளங்குகிறது அவர்களுக்கு அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் ஏதாவது ஒரு விடயத்தில் என்னை சிக்கவைத்து, என்னை சிறையில் அடைக்க அல்லது எனது உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்த மனுஷ நாணயக்கார அமைச்சருக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் நோக்கம் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. ஒரு சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும்.”
தன்னிடம் உள்ள ஆதாரங்களை உடனடியாக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.