த.சிவபாலு
ஆதிபர் மறைந்து பத்து ஆண்டுகள் மறைந்தோடிவிட்டது என்பதை நம்பமுடியளாதுள்ளது. அவரின் நினைவாக நண்பர்களால் நாட்டப்பட்ட பெருமரக் கன்றொன்று இன்று வளர்ந்து அவரதுநினைவை நிழலாக்குகின்றது. அவரின் நினைவாக ஏதாவது செய்யவேண்டும் என்பதை ஆவரோடு நெருங்கிப்பழகியவர்களுள் ஒருவரான பொறியியலாளர் குமார் புனிதவேல் முன்மொழிந்தார். கதிர்துரைசிங்கம் வழிமொழிந்தார் ஒப்பேற்ற கவிநாயகர் வி.கந்தவனம், முனைவர் சிவகடாட்சம், சிவா சின்னையா, த.சிவபாலு, ஆகியோர்; சேர்ந்து ஸ்காபுறோ மல்வேர்ண் நூல்நிலையக் வளாகத்தில் மரக்கன்றை 2016ல் நட்டுவைத்தோம். அதனடியில் அதற்கு அண்மையாக 2016ல் மகாஜனக் கல்லூரியினர் ஒரு இருக்கைக்கான வாங்கு ஒன்றை அமைத்துள்ளனர். வருடா வருடம் நாங்கள் அந்த மரத்தடியில் கூடி நின்று அஞ்சலி செலுத்துவது வழக்கமாகக் கொண்டுள்ளோம். அதில் அவரது பிள்ளைகளும் கலந்துகொள்ளுவர்.
இது அவரை நினைவிருத்த மேற்கொள்ளப்படும் ஒரு நினைவிடமாகவே கருதப்படுகின்றது.
நல் ஆலோசகனாய், நண்பனாய், தந்தையாய், சகோதரனாய், உற்ற நற்தோழனாய் கனடாவில் கால்பதித்தநாள்முதலாய் எக்கு மட்டுமல் பழகியோர் அனைவருக்கும் மேலாக மகாஜன மாணாக்கர்களுக்கும் ஆசிரியர் குழாத்துக்குமே என்றென்றும் அதிபராய் வாய்ந்தவர் மறைந்தும் மறையாத மேதை அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள். இறுதி நாட்களை இன்றுந்தான் மறக்கமுடியவில்லை. அவருக்கு இருந்த குருதி மாற்றவேண்டிய நோய்க்காக மருத்துவமனைக்குச் செல்வதை வழக்கமாக் கொண்டிருந்தார். அவரோடு உடனிருந்த பெண்பிள்ளைகள் இருவரும் அவுஸ்திரேலிய திரும்பும் வழியில் பெரியபிரித்தானியாவில் நிற்கின்றார்கள் என்பதை அறியமுடிந்தது. மூத்த மகன் அப்புவும் மருகள் தர்சினியும் அடிக்கடி உணவு கொண்டுவந்து கொடுத்துச் செல்வார்கள். அன்றும் உணவோடு வந்த தர்சினிக்கு கதிரையில் இருந்தபடியே தூங்கிக்கொண்டிருந்த காட்சிதான் முதலில் கண்ணில் பட்டது. எழுப்பியபோது அவரை அசைக்கமுடியவில்லை. அவசர வைத்தியப்பிரிவினர் வந்து அவர் உயிர் பிரிந்துவிட்டது என்பதனை அறிந்து பரிதவித்தார்.
பொ.கனகசபாபதி அவர்கள் கனடிய மண்ணில் வாழுகின்ற நம்மவர்களில் முதலில் வைத்து எண்ணப்படும் ஒருவர். நல்லவற்றை நினைத்தல் வேண்டும், நல்லவற்றை செய்தல்வேண்டும், நல்லவையே நடத்தல் வேண்டும் என நினைந்து செயற்படும் ஒரு பண்பாளர். மகாஜனக் கல்லூரி, புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரி ஆகியவற்றின் அதிபராகப் பணியாற்றியவர். உயிரியல் கற்பிப்பதில் அவருக்கு நிகர் அவரே எனப் பலராலும் புகழப்பட்ட தனது கற்பித்தல் திறனால் மாணவர்களை நெறிப்படுத்தி வழிப்படுத்திப் பல்கலைக் கழகம் புகுவதற்குக் காரணராகத் திகழ்ந்தவர். சண்டிலிப்பாய்க் குக்கிராமத்தில் 1935 செப்டம்பர் 4ந்திகதி பொன்னையா, ஆச்சிமுத்துத் தம்பதியினர் பெற்றெடுத்த பிள்ளைகள் ஐவரில் இளைய மகனாகப் பிறந்த அவருக்கு இரு ஆண்சகோதரர்களும் இரண்டு பெண்சகோதரிகளும் இருந்தனர். மூத்த சகோதரரின் வீடு சண்டிலிப்பாயில் உள்ள மாகியப்பிட்டியில் எனது மனைவியின் தாய்மாமன் ஆயர்வேத வைத்தியர் நமசிவாயம் அவர்களின் வீட்டிற்கு அண்மையாக உள்ளது. முருகேசு ஆசிரியர் என்றால் எல்லோருக்கும் தெரியும். கனெக்ஸ் இந்தியா சென்று படிப்பதற்கு வழிவகுத்தவர் அவரே என அதிபர் பலதடவைகள் என்னிடம் கூறியுள்ளார். அதிபரின் தந்தையார் மூத்த மனைவி இறந்தபின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர். அதிபர் இரண்டாவது மனைவியின் மகன். ஆனால் அண்ணன் முருகேசு அவர்கள் தம்பி மீது அலாதியான பிரியம் உடையவர். அவரின் உயர்வுக்கு அயராது உழைத்தவர்.
ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கற்கும் காலத்தில் அங்கு அதிபராயிருந்த ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் எளிமை, கண்டிப்பு, நிருவாகத்திறமை என்பனவற்றால் பெரிதும் கவரப்பட்டவர். உயர்கல்விக்காக தமிழ்நாடு சென்று கிறிஸ்தவக் கல்லூரியில் உயிரியலைச் சிறப்புப்பாடமாகக் கற்று உயர்விருதினையும் தனதாக்கிக்கொண்டவர்.
அன்பு நிறைந்த ஆசானாகவும், கண்டிப்பு நிறைந்த அதிபராகவும் அவர் பணியாற்றியமையால்; அவர் அனைவராலும் நன்கு மதிக்கப்படும் ஒரு வழிகாட்டியாக, நல்லதோர் எடுத்துக்காட்டாக, மானுடம்போற்றும் மகானாக வகுப்பறைகளில் மட்டுமன்றி வாழ்க்கை முழமையும் பவனிவந்துள்ளார். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்பார்கள். எனவே குருவாக அமைய மாணவர்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும். மகாஜனக் கல்லூரி தனது வாழ்வின் பொற்காலம் என்று அவர் பலதடவைகள் குறிப்பிட்டுள்ளமையை அவரோடு நெருங்கிப் பழகுபவர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும் அவர் அதிபராக இருந்து வளர்த்த ஸ்ரீசோமஸ்கந்தக் கல்லூரியையும் அவர் தன் இரு கண்களாகவே கருதிவந்துள்ளார். ஏழாலை மகாவித்தியாலயத்திற்கு அதிபராக அனுப்பப்பட்ட அவர் அங்கிருந்து பட்டப் பின்படிப்பிற்காகப் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். ஓரிருமாதங்கள் அங்கு பணியாற்றியவர் கற்கை விடுமுறையில் சென்றமையால் அங்கு அவர் பணி நீடிக்கவில்லை. இதன்பின்னர் அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் ஒருநாள் அதிபராக இருந்தும் உள்ளார்.
பல்கலைக் கழகக் கல்வியை இந்தியாவில் முடித்துக் கொண்டு நாடுதிரும்பிய அவர் ஆசிரியத்தொழில் தேடி தான் கற்ற ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்குச் சென்று ஒறேற்றர் சுப்பிரமணியத்தை நாடினார். அங்கு இடம் இல்லாமையால் ஒறேற்றர் அவரை அழைத்துக்கொண்டு மகாஜனாவிற்குச் சென்று அங்கு அதிபராக விருந்த ஜெயரட்ணம் அவர்களிடம் இந்தப் பொடியன் கெட்டிக்காரன் உனது பாடசாலையில் இ;டம்கொடு என்று கேட்டுக்கொண்டதனால் அவருக்கு அங்கு இடம்கிடைத்தது. மகாஜனவிலேயே தனது கற்பித்தலைத் தொடங்கினார். பின்னர் கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு வரும்படி அதிபர் சுப்பிரமணியம் கேட்டபோது மகாஜனா அவரை அனுப்ப மறுத்துவிட்டது. அவ்வளவிற்கு மாணவர்களையும் அதிபர், ஆசிரியர்களையும் கவர்ந்திழுத்த கற்பித்தல் ரகசியம் மட்டுமல்ல மற்றவர்களைக் கவரும் வசீகரமும் அவரிடம் குடிகொண்டிருந்ததே காரணம் எனலாம். பயிலும் மாணவர்கயையும், தனது தொழிலையும் நன்கு நேசித்தவர் அவர். அந்த நேசிப்பும் அர்ப்பணிப்பு மனமும் அவருக்கு மாணவர் மனம்பற்றிச் சிந்திக்கத் தூண்டியதில் வியப்பில்லை.
அது மட்டுமன்றி மாணவப் பராயத்து மனதைத் தூண்ட அவரது உயிரியல் விஞ்ஞான அறிவும், மாணவர்களுடன் ஊடாடிய பட்டறிவும் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பெற்றுக்கொண்ட உளவியல் அறிவும், கற்றல், கற்பித்தல் பற்றிய நோக்கும் அவருக்குத் துணைநின்றுள்ளன. இவற்றிற்கு மேலாக அவர் பல்துறை வித்தகராகத் திகழ்வதற்கு கண்டதும் திண்டு பன்றிபோலாகாது கண்டதும் கற்று பண்டிதராக அவர் தன்னை மிக அடக்கத்தோடு வளர்த்துக் கொண்டுள்ளார். கனடிய மண்ணில் அவரை ஒரு நடமாடும் நூலகம் என்றே குறிப்பிடத்தக்க அறிவுப் பெட்டகமாகத் திகழ்கின்றார். எவற்றையும் அறிவுபூர்வமாக நோக்கும் மனப்போக்கும், சரி எனப்பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் மனவைராக்கியமும் அவரிடம் உண்டு. நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என இடித்துரைக்கும் நேர்மைத்தனமும் அவரை உயர்த்தி வைத்திருக்கும் பாங்குகள். அவர் ஒரு சாமானியனாக அன்றி மாணவர்களின் உள்ளங்களில் புகுந்து அவற்றைக் கல்லி (தோண்டி) எடுப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தமையே அவரது கற்பித்தல் வெற்றிக்கு வழிவகுத்தது. கல்வி எடுப்பது அறிவின் ஊற்று. அந்த அறிவூற்றை மாணவர்களிடையே பெருக்கெடுக்க வைத்தவர். அதற்காக என்னென்ன உத்திகளைக் கையாளமுடியுமோ அவற்றைக் கையாண்டு மாணவர்களுக்கு இலகுவாக தான் கொடுக்கவேண்டியவற்றை புரிய வைத்து வெற்றி கண்டவர். இதனை அவரது மாணவர்களே பெருமையுடன் கூறி அவரின் இழப்பைத் தாங்கொண்ணாது கேவிக் கேவி அழுததைக் கண்டுள்ளேன். மனித உள்ளுறுப்புக்களை வண்ணச் சோக்குக்கட்டிகளாhல் மிக நேர்த்தியாக வரைந்து விளக்கமளிப்பது அவரது கைவந்து கலை. அன்று விளக்கப்படங்களே ஆசிரியர்களுக்குக் கைகொடுத்தன்.
அதனை உயிரியல் விஞ்ஞானத்தில் கையாண்டுள்ளமை மாணவர்களை பல்கலைக் கழகம் நோக்கி நகர்தியது மட்டுமல்ல மருத்துவத்துறையை அவரது மாணாக்கர் அக்கிரமித்துக்கொள்ளவும் வழிவகுத்தது. இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் மகாஜனக்கல்லூரியை நாடி மாணவர்கள் வரவைப்பதற்கு இவ்வித கற்பித்தல் உத்திகளோடு உதைபந்தாட்டம், கரபந்து, துடுப்பாட்டம் போன்றவற்றிலும் முன்னணி வகுத்து வந்தமை அகில இலங்கை மட்டத்தல் பேரும் புகழும் நிலவக்காரணமாகியது.
கனடாவில் கல்வி அமைச்சின்கீழ் பல்கலாச்சார அலுவலராகப் பணியாற்றிய அவர் பின்னர் தன்னை ஒரு எழுத்தாளராவே மாற்றிக்கொண்டு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவுஸ்த்ரேலியாவில் பல்கலைக் கழக பேராசிரியராகப் பணியாற்றும் ஆசி. கந்தராசா அவர்கள் ‘நல்ல கருத்துக்களைக் கதையாக்கிச் சொல்வதன் வலிமை’ பற்றி இன்று நிறையவே பேசப்படுகிறது. பள்ளியில் படித்ததற்கு மேலாக பாட்டியின் கதைகள் மூலம் நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொண்ட ஆழ்ந்த விழுமியங்கள் ஏராளம். . . . . தனிநபரின் அடையாளத்iதினை உருவகப்படுத்தவும் தொடர்பாடலை இலகுவாக்கவும் கதைகூறல் பயன்படுகிறது. இந்த யுக்தியை நாம் ஆசிரியர் எவ்வாறு இந்நூலில் கையாண்டிருக்கிறார் என்பதை உற்றுத் தெரிந்தோமேயானால் நாமும் நமது அன்றாடக் குடும்ப வாழ்க்கையில் பயனடையலாமென்பது இங்கு நோக்குதற்குரியது.’ என்று அவர் அதிபர் எழுதிய ‘மனம் எங்கே போகிறது’ நூலுக்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திறவுகோல் நூலுக்கு அவர் எழுதிய மதிப்புரையில் ‘மானுடம் சார்ந்த வாழ்க்கை மயக்கங்களை பிரயோக விஞ்ஞான வழிகாட்டுதல்கள் எவ்வாறு அகற்றுகின்றன? அறிவியல் உண்மைகள் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதில் என்ன பங்களிப்புச் செய்கின்றன? இவ்வாறு எழும் கேள்விகளுக்கு திரு.கனகசபாபதி அவர்கள் இலகு தமிழில் சுவையாக விளக்கம் தந்துள்ளார் என்கிற நிறைவே இந்நூலினை வாசித்து முடித்ததும் எனக்குப் பட்டது’ என எழுதியிருப்பதில் இருந்து பொ.க.வின் ஆளுமை புலப்படுகின்றது.
அவரது ‘திறவுகோல்’ நூலுக்குப் பதிப்புரைதரப் புகுந்த வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு. சிவகுமாரன் ‘அவரது நகைச்சுவை ததும்பும் எழுத்துக்கள் விஞ்ஞானக் கட்டுரைகளில் உள்ள இயல்பான இறுக்கத்தைத் தவிர்த்து பல்தரப்பட்ட வாசகர்களையும் ஒருமுகப்படுத்தியது’ என்று அவரின் எழுத்தாற்றல் பற்றியும் வாசகர்களை வசிகரிக்கும் தன்மைபற்றியும் குறிப்பிட்டுள்ளார். கோகிலா மகேந்திரன் அதிபரின் மாணவியருள் ஒருவர். அவர் தெல்லிப்பளை கலை இலக்கியக்களத்தின் செயலாளராக இருக்கின்றார். அந்த இலக்கியக் களத்தின் மூலம் அதிபர் பொ.கவின் மாறன் மணிக்கதைகள் பாகம் 2, ‘மனம் எங்கே போகிறது’ இரண்டையும் நூலுருவாக்கி வெளியே கொண்டு வந்திருக்கின்றார். அவர் தனது வெளியீட்டுரையில் ‘அந்தக் காலம முதல் இந்தக்காலம் வரை அவருள் இருந்து இயல்பாக வெளிவரும் நகைச்சுவை உணர்வு, இத்தொகுதியில் விஞ்ஞான, உளவியல் உண்மைகளோடு கலந்து வரும்போது அற்புதமாக இருக்கிறது.’ என்று குறிப்பிட்டு அதிபரின் எழுத்தாற்றலை வெளிப்படுத்துகின்றார்.
‘மனம் எங்கே போகின்றது’ என்னும் நூல் உளவியல் கற்போருக்கு ஒரு மூலாதார நூலாகப் பயன்படும் அதேவேளை பெற்றோருக்கும் மற்றோருக்கும் உபயோகமான அறிவுப்பரப்பினை தரும் ஒன்றாக அமைகின்றது. பெற்றோர் பிள்ளைகள் உறவுமுறைகள், பெற்றோர் தமது நடத்தையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள், காலத்தோடு ஒட்ட ஒழுகல் வேண்டும் என்னும் நிபந்தனையை முன்வைத்து கட்டுரை ஆக்கம் செய்தது போன்றே அவரது கட்டுரைகள். ஆவர்களைப் புரிந்து கொள்வோமா, பெற்றோருக்கான எட்டுக்கட்டளைகள், பிள்ளைகள் வளர்ப்பு முறை காலத்தோடு மாற்றம் காணப்படவேண்டும், மாற்றம் விளைவிக்கும் திறனுடைய எட்டு நிபந்தனைகள், செவிமடுத்தல் தொடர்புறுதல், அந்தநாள் ஞபாபகம் வந்ததே நண்பனே, நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா? நனவு அல்லது பிரக்ஞை, பயம்- அச்சம்தவிர், கற்றல், தூக்கம் கண்களைத் தழுவட்டுமே, கனவு. .. அரு ஒருவர் பார்தது அனுபவிக்கும் நாடகம், பாதியும் மாஸ்லோவும் என மிகவும் நகைச்சுவையான தலைப்புக்கள் நகைச்சுவையோடு கூடிய அறிவுரைகள்.
‘திறவுகோல்’ அனைத்தும் நாளாந்தம் வெளியே வரும் விஞ்ஞான ஆய்வுக் கண்டு பிடிப்புக்களை நுணுகி அவற்றை இலகுவாக நகைச்சுவை கலந்து மூளைக்கு வித்தகத் தந்துள்ளார். மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய பலவிடயங்கள் அலசப்பட்டுள்ளன. ‘அழகுக்கும் அறிவிற்கும் உத்தரவாதம் மனித முட்டைகள் விற்பனையில்’, ‘முதுமை இனி இல்லை புதுமையான கண்டுபிடிப்பு’, ‘புதுமை இனி இல்லை! புதுமையான கண்டுபிடிப்பு!’ ‘ஆழரளந க்கு வநத மவுசு!”நீ இன்றேல் நான் இல்லை’ ‘அர்த்தநாரீஸ்வரர் என்பதில் அர்த்தம் உள்ளது’ ‘நெற்றிக்கண் காணமுடியுமா?’, ‘2050இல் முதியவர்க்கு உயிர் கோபாப் பிரச்சினை’ ‘பெயர் சொல்ல ஒரு பிள்ளை ஆண்பிள்ளை?’ ‘ஆண்களுக்கு கேடுகாலாம் வருகிறதா?’ ‘ஆண்களாலும் முடியும் ஆனால். .’, ‘இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு தந்தையர்’ ‘சிறுவனின் வயிற்றில் சிசு’ ‘இன்னுமொரு ஐம்பது ஆண்டுகளின் பின்னர்’ இவ்;விதமான பல கட்டுரைகள் காணப்படுகின்றன. அவர் தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தலைப்புக்களே அதனுள் என்ன உள்ளது என்பதனைத் தேட ஆவலைத்தூண்டும் கட்டுரைகளைத் தருவதில் போலவே அவரது கருப்பொருட்களும் சிறந்த கருத்துக்களை உள்ளடக்கியனவாகும்.
அதிபர் பொ.க.அவர்கள் ‘சிரிக்கும் கோடையில் சிலிர்க்கும் பனி நாடு’ என்னும் என்.சோமகாந்தன் அவர்களின் பிரயாணக் கட்டுரைகளாக அமைந்த நூலுக்கு அணிந்துரை தந்துள்ளார். அதில் மார்க்கோபோலோ 24 ஆண்டுகள் ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தபின்னர் தான் பார்த்தவற்றை ஒன்றும் தவறவிடாது எழுதியது போன்று சோமகாந்தனின் கனடிய பயணம் அவர் பார்த்தவற்றை எல்லாம் எழுத வைத்திருக்கின்றது எனக்குறிப்பிட்டுள்ளமை அவரது புலமையைப் புலப்படுத்துகின்றது. ‘சாமானியன் ஒருவன் கற்பனைக்கும் எட்டாத, சாமானியன் ஒருவனால் சொல்வதற்கு முடியாத எண்ணிறந்த தகவல்களை இந்த மேதாவி மூன்றாம் வேற்றுமையில் சொல்லப்போக – ‘இவன் கதை அகள்கிறான்’ எனச சாமனியன் மாத்திரமல்ல கற்றறிந்தோர்களும் கூடச சொல்லப் போனார்கள். இது கதையல்ல வார்த்தைக்கு வார்த்தை அப்பளுக்கற்ற நிசம் என் மக்கள் உணர்வதற்கு மேலும் ஒரு நூறு வருடங்கள் எடுத்தன’ என்பதனை ஒப்புநோக்கித் தந்துள்ளார் என்றால் அவரது ஆழமான பார்வை எப்படியானது என்பது புலப்படும்.
அவர் எழுதிய ‘எம்மை வாழவைத்தவர்கள்’, ‘மரம் மாந்தர் மிருகம்’ என்னும் இரு நூல்களும் பல நாடுகளில் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. முதலாவது நூலுக்கு அணிந்துரை எழுதியவர்கள் இருவர் ஒருவர் இன்று நோர்வேயில் வாழ்ந்துகொண்டிருக்கும் வரலாற்றாசான் பொன்னம்பலம் இரகுபதி ஆவார். மற்றவர் பொ.கா. காலத்தில் யாழ்ப்பிராந்திய கல்விப்பணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்று இன்று கனடாவில் வாழ்ந்து மறைந்த க. சிவநாதன் அவர்கள். இந்த நூலில் யாழ்ப்பாணத்தில் கோலோச்சிய அதிபர்கள் 24 ஆளுமைகள் பற்றிப் பதிவாக்;கியுள்ளார். காலத்தின் கட்டாய தேவையாக அவர் கருதிய நீண்டகாலக் கனைவை அவர்தான் மறைவதற்கு முன்னர் பதிந்துவைக்கவேண்டும் என வேணவாக்கொண்டிருந்தார். அவரது நூல்வெளியீட்டிற்கு பெருந்தொகையானவர்கள் வந்து நூல்களைப் பெற்றுச் சென்றார்கள் என்றால் அவரைப் பற்றிய சமூக நிலை எத்தகையது என்பது வெள்ளிடை மலை. இரண்டாவது நூலில் அவர் விரும்பி இரசித்து மகிழும் இயற்கை வனப்பைப் பற்றியது. ஆனால் கதையோடு இணைத்து இவற்றைத் தந்திருப்பது அவரது கதைசொல்லும் திறனையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த நூலுக்கு முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.
இவற்றைவிட நாடக, நடன, இசைத்துறைகளில் நுணக்கமான பார்வையையும் அறிவையும் கொண்டிருந்தார். கனடாவில் இடம்பெற்ற அரங்கேற்றங்கள் அவர் இல்லாமல் நடந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவரது பேச்சுக்கள் யாரையாவது மனங்கோண வைக்காத பண்பார்ந்த ஆனால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கத்தக்க பேச்சாகவே இருக்கும். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஒரு விழாவில் பங்கேற்றபோது அவரைப் பற்றி அதிபர் ஆற்றிய உரையைக் கேட்டபோது ‘என்னைப் பற்றி நான் அறிந்திராதவற்றையெல்லாம் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றாரே’ என்று வியப்புற்றுள்ளார்.
இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அதன் கண்விடல்
என்னும் வள்ளுவர் வாக்குக்கேற்ப யாரிடம் எந்தப்பணியைக் கொடுக்கவேண்டும், யாரால் இது ஆகும், யார் இதற்கு உரியவர் என்பதனை அவர் ஒருவரைப் பார்த்தமாத்திரத்தே தீர்மானித்துவிடும் இயல்புடையவர். நான் கனடாவிற்கு வந்தபுதிதில் நான் அவரை ஒரு முறை சந்தித்தேன். ஏதோ என்னை அவருக்குப் பிடித்துவிட்டது. ஒரு பாட நூல் வெளியீட்டிற்குப் போயிருந்தேன். ஆனைப் பற்றி எழுதுங்கள் என்றார். அவரது அன்புக்கட்டளையைத் தட்டமுடியாமல் எழுதிக் கொண்டுபோனேன். ஆவர் அதனை உதயன் அலுவலகத்தல் சேர்த்துவிடுமாறு பணித்தார். நான் அவ்விதமே கொண்டு சென்ற கொடுத்தேன்.
லோகேந்தரலிங்கத்திடம் கொடுத்தேன். அவர் ஒரு பார்வை பார்த்தார். யாரிவர்? என்ன என்ற கேள்விகள் அவர் மனதில் தோன்றியிருக்கவேண்டும். அதிபர் கனகசபாபதி அவரகள் கொடுக்கச் சொன்னார் என்று கூறியதோடு கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டேன். என்னைப் போல் எழுதத் தொடங்கியவர்கள் பலரை ஊக்குவித்தவர் அதிபர் பொ.க. அவர் ஒரு பூந்தோட்ட, மரக்கறித்தோட்டத்துப் பயித்தியம் என்பதனைவிடவும் துடுப்பாட்டப் பயித்தியம் என்று சொல்லாம். அவ்வளவிற்கு அதில் ஊறிப்போய் அனைத்தையும் மறந்தே போயிருப்பார். துடுப்பாட்டம் நடக்கின்றதென்றால் அவரோடு தொலைபேசியில் அழைத்தாலும் கதைநீளாது என்றால் அவர் துடுப்பாட்டம் இடம்பெறுகின்றது என்பதனை உணர்ந்துவிடாம். துடுப்பாட்டம் பற்றி பக்கம்பக்கமாக அவர் எழுதிக் குவித்து வாசகர்களை மகிழ வைத்தவர். அது மட்டுமன்றி அதிகாலையில் துடுப்பாட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தவேளையே அவரது உயிர் பிரிந்திருக்கின்றது என்பது அவர் அதில் எத்துணை ஈடுபாட்டைக் கொண்டிருந்துள்ளார் என்பது தெளிவு.
யாராருக்கு விருதுகள் வழங்கப்படவேண்டும், யாராருக்குப் பாராட்டுவிழா எடுக்கவேண்டும், யாராருக்கு பிறந்தநாள், திருமண நினைவுநாள் கொண்டாடவேண்டும் எனக் கணக்குப்போட்டு அவற்றைச் செயற்படுத்தியவர். குறிப்பாக யாருக்கு யார்மூலம் செய்யவேண்டும் என்பதனையும் அறிந்து அவர்களை முன்னிருத்திச் செயற்பட்டவர். கவிநாயகர் வி. கந்தவனம், டாக்டர் கதிர் துரைசிங்கம், பண்டிதர் மா. சே. அலக்சாந்தர், சட்டத்தரணி மனுவல்ஜேசுதாசன், செல்வா இலங்கையன், குறமகள் வள்ளிநாயகி, போன்றோரின் பாராட்டுவிழாக்கள் மட்டுமல்ல 60வது 75வது பிறந்த நாள் கொண்டாடங்களு;ககான முன்னெடுப்புகளுக்குச் சூத்திரதாரி அவரே. இதற்காக அவர் குழுக்களை அமைத்துச் செயற்படவைத்தார். அனைத்துக்குழுக்களில் மட்டுமல்ல அவரது நூல்வெளியீட்டிலும் என்னை முக்கிய வகிபாகத்தை ஏற்க வைத்திருந்தார். அவ்விதமே உதயன் சர்வதேச விருது விழா, போன்ற காத்திரமான விடயங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றியவர்.
புதிதாக வரும் ஆங்கிலச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களை ஆக்கவேண்டும் என்பதில் முனைப்புக்காட்டியவர். ஆதற்காக விளம்பரம் பத்திரிகை அலுவலகத்தில் இராஜா மகேந்திரனின் உதவியோடு மாதாந்தம் கூடி சொல்லாக்கம் செய்வதற்குத் தலைமைதாங்கி வழிநடத்தியவர் என்பது அவரது அபார முயற்சி என்றே சொல்லுவேன். எந்தெந்தத் துறைகளில் யார் யார் வல்லுநர் என அறிந்து அவர்களை அழைத்து அந்த சொல்லாக்கத்தை மேற்கொள்ள அவருக்கு உறுதுணையாக நின்றவர்களுள் மணி வேலுப்பிள்ளை முக்கியமானவர்.
புத்திரியைகளுக்கு எழுதியதோடு மட்டுமன்றி அவற்றிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி நெறிப்படுத்தியவர் என்பதனையும் மறக்கமுடியாது. தாய்வீடு, உதயன், விளம்பரம், தமிழர் தகவல், ஈழநாடு போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் ‘அதிபர்’ அவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுவருவதனை நான் நன்கு அறிவேன்.
அவரிடம் கற்றவர்கள் உலகின் பல பாகங்களிலும் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். அவர் உயிரியல் ஆசானாக இருந்தமையினால் மருத்துவர்களாக உள்ளவர்கள் அநேகர். அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு பெரும் துன்பத்தையும் ஒரு இடைவெளியையும் ஏற்படுத்தியுள்ளது என்பதும் கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்பதும் நிதர்சனம். ஒரு ஜனரஞ்சக மனிதரை தமிழ் கூறும் உலகு இழந்துவிட்டது. அன்பால் பெருந்தொகையான உள்ளங்களைக் கவர்ந்திழுத்த அவரது பிரிவு பழகிவயர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளமை வியபப்பில்லை.
அதிபர் காங்கேசன்துறையைச் சேர்ந்த திரு, திருமதி குருநாதபிள்ளை இராசம்மா தம்பதியினரின் புதல்வி அமிர்த கௌரியைத் ஒக்டோபர், 1963ல் திருமணம் செய்துகொண்டார்.
ஆமிர்தகௌரி அவர்கள் கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். இவர்களது திருமணத்தை நிறைவேற்றுவதில் அவரது முதல்மாணாக்கர் என அடிக்கடி குறிப்பிடும் நெருங்கிய நண்பர் கதிர் துரைசிங்கம் தம்பதியினர் உழைத்தனர் என்பதனை நன்றிப்பெருக்கோடு அடிக்கடி நினைவு கூருவதனை அறிவேன். இதன்பயனாக மணிவண்ணன், மணிமாறன், மணிவிழி, மணிமொழி எனப்பெயரிய நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். துரதிஷ;டவசமாக துணைவியாரை புற்றுநோய்க்கு பறிகொடுத்த அதிபர் அவர்கள் இரண்டாவது மகன் மணிமாறனையும் பறிகொடுத்த மனச்சுமையோடு வாழ்ந்துவருவது துர்லபமே! முதன்மைப் புதல்வன் மணிவண்ணன் திருமணம் செய்து ஒரு புதல்வியைப் பெற்றெடுத்து அதிபருக்குப் பேத்தியாக இலட்;சியா மணிவண்ணனைக் கண்டு களிக்கவைத்துள்ளமை அவருக்கு மனமகிழ்வைத்தரும் ஒன்றாக அமைந்துள்ளமையை அறியமுடிகின்றது. ஆன்புப்பேத்தியின் வளர்ச்சி, முன்னேற்றத்தை கண்டு அனுபவித்து இன்பங்கொள்ளும் நிலைமை அவருக்கு புது உற்சாகத்தை ஊட்டுகின்றமை கருத்திற்கொள்ளத்தக்கது.
ரொறன்ரோவில் குடியேறிய அதிபர் அவர்கள் தான் வாழ்ந்த கூட்டுறவுக்குடியிருப்பில் ஒரு நூலகத்தை ஆரம்பிப்பதில் முழுமூச்சாக உழைத்தவர். அந்த நூல் நிலையம் நண்பர்களால் அவரின் பெயரைச் சூடிக்கொண்டது அவரது பெருமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தனக்கென வாழப் பிறர்க்குரியாளராக வாழ்ந்து வந்தவர், வருபவர் அதிபர் திரு. கனகசபாபதி அவர்கள். ‘என்னை நன்றாகப் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ என்றார் ஞானி திருமூலர். ஆம் அந்தவழியிலே தான் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என விளைந்தவர், விளைந்து வருபவர் மட்டுமன்றி தன்னைச் சார்ந்தோரை நெறிப்படுத்தி வழிப்படுத்தி முன்னுக்குக் கொண்டுவருவதில் சமர்த்தராகவே விளங்குகின்றார். ‘என்கடன் பணி செய்து கிடப்பதே’ என அல்லும் பகலும் அனைவரதமும் தொடர்ந்து செயற்படுபவர். ஏந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் அதனை ஏற்றுத் தவறாது சென்று வருபவர். தனது சுக துக்கங்களை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பண்பாளர். தனது உயரிய பார்வையால் அனைவரையும் வசீகரிக்கும் அற்றல் கொண்டவர். இன்றும் எம்முள்ளே மறைந்தும் மறையாத ஆசானாகவே அவர் மனக்கண்முன் காட்சிதருகின்றார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணுலகிற்கு பயணித்துச் சென்றாலும் இன்னும் பக்கத்தில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வோடு… ‘அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் பற்றியது