தயானந்தா
இதுவரை இல்லாததோர் ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் நடைபெற உள்ளது. பிரதானமாக இது மூன்று அல்லது நான்குமுனைப் போட்டி என்ரு சொல்லப்பட்டாலும் , களத்தில் வேஷம் கட்டி 38 பேர் உள்ளனர். ஒருவர் உயிரிழந்ததால் அந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது.
இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் சீரழிவைக் காட்டும் ஒரு தேர்தலாக இதைப் பார்க்க முடியும். நாட்டிற்கு விடுதலைப் பெற்றுத்தந்தது என்று கூறிக்கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்களிடம் பிரபலமாக இருந்த அதன் யானைச் சின்னத்தையும் இம்முறை காண முடியவில்லை. ஆனை கட்டி போரடித்த கூட்டத்தில் ஒரு தனித்த விவசாயி மட்டுமே களத்தில் நிற்கிறார். அந்தப் பாரம்பரியக் கட்சியின் தலைவராக பல ஆண்டுகளாகக் கோலோச்சி நாட்டின் பிரதமராக ,எதிர்க் கட்சித் தலைவராக, அரகலயவின் புண்ணியத்தில் ,இடைக் கால ஜனாதிபதியாக இருந்த ஒருவர் இன்று சுயேட்சையாக போட்டியிடும் நிலை.
உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுத்தந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலையோ, அந்தோ [பரிதாபம் என்றாகி இருக்கிறது. அது கழுதையாகி அதுவும் தேய்ந்து கட்டெறும்பான நிலை. அக்கட்சியின் சார்பில் விஜேதாச ராஜபக்ச நிற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரோ அவரது கட்சியோ போட்டியிலேயே இல்லை என்று கூறும் சூழல் தான் நிலவுகிறது என்று கள ஆய்வுகள் காட்டுகின்றன. இம்முறை எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை ஆதரிக்கப்போவதுமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் சொல்லிவிட்டு எங்கோ வாளாதிருக்கிறார்.
சுதந்திரக் கட்சியை உண்டு இல்லை என்று ஆக்கி, அதிலிருந்து பிரிந்து தனக்கென்று ஒரு கட்சியை குடும்ப சகிதம் உருவாக்கியவர் மகிந்த. தேர்தல் பகிஷ்கரிப்பால் ஜனாதிபதியாகி, போர் வெற்றிப் பெருமிதத்தில் தனது தம்பியையும் ஜனாதிபதியாக்கிக் காட்டிய மகிந்த ராஜபக்சவின் மொட்டின் இதழ்கள் உதிரத் தொடங்கி விட்டன. இன்று மொட்டு சின்னத்தில் தனது மகனை நிறுத்தியுள்ளார். உதிர்ந்த அந்தக் கட்சியில் மகிந்தவுடன் கூடி நின்ற பலர் இன்று பல்வேறு கட்சிகளில் ஐக்கியமாகியுள்ளனர், பலர் தமது சுய அடையாளத்தையும் இழந்துள்ளனர்.
தலைவரும், பிரதித் தலைவரும் மோதிக்கொண்டதில் பிளவுபட்ட ஐக்கிய (மில்லாத) தேசிய கட்சி இன்று அதிகாரபூர்வமான முறையில் போட்டியில் இல்லை. ரணிலுடன் முரண்பட்டு பிரிந்துவந்த சஜித், தனியாக கூட்டணி அமைத்து பழைய தொலைபேசியில் போட்டியிடுகிறார். ஆதரவுக்காக பலருக்கும் மணியடித்த அந்த தொலைபேசிக்கு மக்கள் மணியடிப்பார்களா இல்லையா என்பது இன்னும் இரு வாரங்களில் தெரியவரும்.
நாட்டிற்கு நல்லதொரு திசையை காட்டுகிறேன் என்று கூறி அனுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்தி என்ற ஒரு கூட்டணியை ஏற்படுத்தி களத்தில் நிற்கிறார். அவர் நல்லதொரு திசையை காட்டுவார் என்று பரந்தளவில் நம்பப்படுகிறது. அவர் முன்னர் இருந்த மணி கட்சியில் இப்போது விரிசல் விழுந்து அது ஒலிப்பதை நிறுத்திவிட்டது. அதிலிருந்த மணியான தலைவர்களும் சித்தாந்தம் என்ற ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பசையுள்ள பக்கம் சென்றுவிட்டார்கள்.
காழ்ப்புணர்ச்சியின்றி பாரபட்சமற்று பார்ப்பதென்றால், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்கள் அனைவருமே ஒரு புதிய கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள். ரணில் விக்ரமசிங்க ஜனாதியாக இருந்தாலும், அவருக்குக் கட்சி இல்லை. நாட்டில் கம்பீரமாக உலவி வந்த யானையை இப்போது காட்டில் மட்டுமே பார்க்க முடிகிறது. கையே நம்பிக்கை என்றதும் போச்சு. பாரம்பரியமாக வெற்றிலை கொடுத்து வரவேற்று உபசரிப்பது பண்பாட்டளவில் உள்ளதே தவிர சுவரொட்டிகளில் அதை கண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மணியோ இப்போது கோவில்களிலும் தேவாலயங்களிலும் மட்டுமே ஒலிக்கின்றன.
இவற்றுக்கு இடையே வடக்கில் தனி ஆவர்த்தனம். ஒரு புறம் பகிஸ்கரிப்பு பிரச்சாரம், மற்றொருபுறம் குழப்பங்களுக்கு இடையே சஜித்திற்கு ஆதரவு என்ற நிலைப்பாடு. இதற்கு இடையே ‘வடக்கு-கிழக்கு சிவில் சமூகம்’ மற்றும் ‘லெட்டர் பேட் கட்சிகள்’ என்று மக்களால் விமர்சிக்கப்படும் கட்சிகள் ஆகியவை இணைந்து பொது தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளனர். கிழக்கைச் சேர்ந்த ஒருவரை வடக்கிலுள்ளோர் வேட்பாளர் ஆக்கியுள்ளதே புதிய சிந்தனை, முன்னெடுப்பு என்று ஒரு தரப்பு புளகாங்கிதம் அடைகிறது.
சங்கை கையில் எடுத்துள்ள அரியநேத்திரன் அந்த சங்கொலி ஓங்கி ஒலித்து முழங்கச் செய்வாரா அல்லது மொத்தமாக தமிழ் தேசியம் என்ற கொள்கைக்கு சங்கூதிவிடுவாரா என்ற பேச்சுக்களும் அங்குமிங்குமாக எழுந்துள்ளன.
நாங்கள் எப்போதும் தேசியவாதிகள் என்று கூறிக்கொண்டு சிலர் தேசியக் கட்சிகள் மற்றும் அதன் வேட்பாளர்களை ஆதரிப்பதே தமது தலையாய கடமை என்று உறுதியாகவுள்ளனர்.
மலையகமும் பிளவுபட்டு நிற்கிறது. தமிழ் முற்போக்கு கூட்டணி தொலைபேசி மீது விளக்கொளியைப் பாய்ச்சியுள்ளது, சேவலோ சிலிண்டர் மேலேறி குந்தியுள்ளது. இனியும் எந்த அரசியல் கட்சியையும் நம்பி பிரயோசனம் இல்லை. மலையக மக்களை இரண்டாம்தர பிரஜைகள் என்ற நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று மயில்வாகனம் திலகராஜ் களத்தில் இறங்கியுள்ளார்.
இப்படியான பின்னணியிலேயே இந்தத் தேர்தலை பல கோணங்களிலிருந்து பார்க்க முடியும், அல்லது பார்க்க வேண்டும், அல்லது அலச வேண்டும். இதெல்லாம் இன்னும் இரண்டு கிழமை மட்டுமே. 21/22ஆம் திகதிக்கு பிறகு ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும்.
சரியாக 14 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலை நாடு சந்திக்க இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் இனவாதப் பரப்புரைகள் அதிகமற்ற ஒரு பிரசாரத்தை இம்முறை காணக் கூடியதாக இருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறக் கூடிய பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகி இருகின்றன. ஐந்தாண்டு செயற்பாடு – இயலும் சிறீலங்கா என்கிறார் ரணில் விக்கிரமசிங்க, ஒன்றிணைவோம் அர்ப்பணிப்போம் வெற்றி பெறுவோம் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது சகலருக்கும் வெற்றி என்ற மகுடத்தின் கீழான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கிறார். அழகான வாழ்க்கை வளமான நாடு என்கிறது தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம். நாமல் இலக்கு – உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு என்ற தலைப்போடு நாமல் ராஜபக்ஷவின் விஞ்ஞாபனம் வெளியாகியுள்ளது.
மறுபுறத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையும் வெளி வந்திருக்கிறது. இந்த அறிக்கையின் பேசு பொருளாக நாட்டின் இனப்பிரச்சனை மையப் படுத்தப்பட்டிருக்கிறது.
தென்னிலங்கை வேட்பாளர்களின் விஞ்ஞாபானங்கள் அனைத்திலும் நாட்டின் பொருளாதார நெருக்கடியும் அதனை மீட்பதற்கான தமது திட்ட செயற்பாடுகளுமே பெரிதும் முதன்மை பெற்றுள்ளன. இந்நிலையில் நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி என்பதே இனப்பிரச்சனையை போரினால் முடித்து வைக்கும் முயற்சியில் கடந்த கால அரசுகள் பெற்ற கடன் சுமைதான் என்பதை தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது.
புரையோடிப் போயுள்ள இனபிரச்சனையும் யுத்த முடிவிற்கு பின்னர் எழுந்துள்ள புதிய பிரச்சனைகளுக்குமான தீர்வுகளாக முக்கியமான விஞ்ஞாபனங்கள் என்ன சொல்லி இருக்கின்றன என்பது கவனத்திற்குரியது.
கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்பது, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழி சமைப்பது, புதிய வருமான வழிமுறைகளைக் கண்டறிவது, வரிக்கொள்கைகள். வேலைவாய்ப்புகள்,, கல்வி, சுகாதாரம் , விவசாயம், தொழில்நுட்பம் என பல விடயங்கள் வழமைபோலவே இவற்றில் பேசப்பட்டுள்ளன.
தற்போதைய ஜனாதிபதியும் வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டப்படி மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிரப்படும் என்றும் மத்திய அரசாங்கம் மாகாண சபைகளிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்ட அதிகாரங்கள் மீண்டும் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்படுவதாகவும் பொலிஸ் அதிகாரம குறித்து புதிய நாடாளுமன்றம தீர்மானம் எடுக்கும் என்பதாகவும் கூறி இருக்கிறார். ஆனால், இதுவரை காலம் பிரதமராகவும் ஜனாதிபதியாவும் இருந்த போது இதெல்லாம் அவர் மனதில் உதிக்கவில்லையா, அல்லது செய்ய மனமில்லையா என்று மக்கள் கேட்பது அவர் காதில் அவசியம் விழுந்திருக்கும்.
மாவட்ட அபிவிருத்தி சபை நிறுவப்படும் அதேவேளை புதிய நாடாளுமன்றத்திடம் புதிய அரசமைப்பை இயற்றும் பொறுப்பு வழங்கப்படும் என்றும் ரணில் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகளுக்கான சுயதொழிலுக்கான நிதி நிவாரணம், போரில் இழக்கப்பட்ட தனியார் காணிகளுக்கான தீர்வை தரும் தேசிய காணி ஆணைக்குழு, காணாமல்போனவர்கள் தொடர்பில் நவாஸ் ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் அகியவற்றுக்கான உறுதி மொழிகளை தந்திருக்கிறார். இதெல்லாம் வாசிப்பதற்கும் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இரண்டாம் வாசிப்பின் போது புளித்துப்போன பழைய விடயங்களாகவே தோன்றுகிறது.
இதேவேளை தற்போதைய அரசமைப்பு 13வது திருத்தம் உட்பட முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை சஜித் பிரேமதாச தந்திருக்கிறார்.. ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சொல்லும் சஜித் அவர்கள், தற்போதைய அரசியல் முறைமை பாராளுமன்ற முறைமைக்கு மாற்றி அமைக்கப்படும் எனக் கூறுகிறார். அதாவது நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறை குழி தோண்டி புதைக்கப்படும் என்கிறார் சஜித். இது யதார்த்த ரீதியில் சாத்தியமா என்று அவரது மனசாட்சி பதில் சொல்லும். ஒரு முறை பதவி சுகத்தை அனுபவித்துவிட்டால் அதிலிருந்து வெளிவருவது எவ்வளவு கடினம் அல்லது விருப்பமில்லாதது என்று அனைவருக்குமே தெரியும். அப்படி நடந்தால் மகிழ்ச்சியே.
அரச ஆதரவுடனான இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் கொள்கைகள் தடுக்கப்படும் என்றும், பாதுகாப்பு தரப்பின் கைகளில் இருக்கும் தேவையற்ற நிலங்கள் காணி உரிமையாளர்களிடம் விரைவில் கையளிக்கப்படும் என்றும் அவர் உறுதி கூறி இருக்கிறார்.
மற்றுமெரு முதன்மை வேட்பாளராக கருதப்படும் அனுரகுமார திசாநாய்க்க 2015 –2019 ஆட்சிக் காலத்தில் முன் வைக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை துரிதமாக நிறைவு செய்து புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கி இருக்கிறார். நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் போனோர் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றிய உரிய விசாரணைகளும் நீதி வழங்கலும் நிலைநாட்டப்படும் என்றும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் சுதந்திர வாழ்வுக்கு வழிவகுக்கப்படுவதோடு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உள்ளடங்கலாக அடக்குமுறைசார்ந்த அனைத்துச் சட்டங்களும் இல்லாதொழிக்கப்படும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.
அத்தோடு, மத முரண்பாடுகளை தீர்க்கவல்ல சர்வ மதப் பேரவை அமைக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். தமிழ் பேசும் மக்களின் இடங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டை உறுதி செய்தல், காணிகள் மற்றும் வாழ்விடங்கள் தொடர்பான விவகாரங்களுக்காக தேசிய ஆணைக்குழு அமைத்தல், வலிந்த குடியேற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்த உறுதிப்பாடுகளும் அனுரவின் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
ஆனால் தமிழர்களின் பிரதான கோரிக்கையான வடக்கு-கிழக்கு இணைப்பு, போர்க்காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் ஆகியவற்றை எல்லோருமே சௌகரியமாக மறந்துவிட்டார்கள்.
இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தேர்தல்கால வாக்குறுதிகள் பெரும்பாலும் சிலுசிலுப்பைகளே தவிர தேர்தல் வெற்றிக்கு பின்னர் அவை பலகாரம் ஆவதில்லை என்பதே அனுபவ அறிவு சொல்லும் பாடம்.
இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்று உங்கள் மனதில் தோன்றினால் அதற்கு நாம் பொறுப்பல்ல. அதே நேரம் நகைச்சுவை இல்லையென்றால் வாழ்க்கையும் இல்லை. ஆக மொத்தம் மக்கள் பையில் இருக்கும் காசை கொடுத்துவிட்டு, சிரிக்க வைக்கும் கோமாளிகளை கண்டு கைதட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள்.
அடுத்த நாள் அந்த கோமாளிகளைப் பார்க்க வேறு சிலர் வருவார்கள். இப்படித்தான் சர்க்கஸ் கம்பெனிகள் நடைபெறுகின்றன