நடராசா லோகதயாளன்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டத்தில் 27 பேர் பங்கு கொண்டு யாப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொண்ட கூட்டத்திலேயே சஜித் பிரேமதாசாவை ஏற்பதான தீர்மானம் எட்டப்பட்டதாக தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
அந்த கூட்டத்தில் பொது தமிழ் வேட்பாளராக களமிறங்கியுள்ள பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டாலும் அது ஒருமித்த கருத்தாக இருக்கவில்லை என்று அறியமுடிகிறது.
இது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மேலும் விபரம் தெரிவிக்கையில்,
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயல்குழுவில் அரியநேந்திரன் உட்பட உள்ள 39 பேரில் 27 பேர் கலந்துகொண்டனர். தலைவர் மாவை.சேனாதிராஜா தன்னால் சுகயீனம் காரணமாக கூட்டத்தில் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார். வேறு ஏதும் காரணங்களிற்காகவும் ஒத்தி வைக்குமாறும் கேட்கவில்லை. இதேநேரம் சி.சிறிதரன் தனது விருப்பத்தை எழுத்தில் அறிவித்திருந்தார். யாப்பின் பிரகாரம் மத்திய செயல் குழுவின் கோரம் 11 பேராகவே காணப்படுகின்றது.
இவற்றின் அடிப்படையிலேயே துணைத் தலைவரான எனது தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது 17 பேர் பொது வேடபாளரான அரியநேந்திரனை ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் எழுத்து மூலமான முடிவு உள்பட 6 பேர் மட்டுமே ஆதரவாக கருத்துரைத்தனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 22 பேர் கருத்துரைத்தனர்.
இவற்றின் அடிப்படையிலேயே 3 தீரமானங்களும் எட்டப்பட்டன. இந்த தீர்மானத்திறகு நானும் கட்டுப்பட்டவன். இதேநேரம் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக ஏதும் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றால் என்னால் மேடைக்கு வர முடியாது என்பதனையும் நான் பதிவு செய்திருந்தேன் என்றார்.
இதேவேளை தமிழ் அரசுக் கட்சியின் வவுனியாத் தீர்மானம் தொடர்பில் தன்னுடன் கலந்துரையாடப்படவில்லை என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக மேற்கொண்ட தீர்மானம தொடர்பில் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடரபில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சுகயீனம் காரணமாக கூட்டத்தில் பங்குகொள்ள முடியவில்லை. இதேநேரம் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் என்னுடன் கலந்து ஆலோசிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
எனினும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன், வவுனியா கூட்டத்தில் எடுக்கப்பட்ட மூன்று தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேறின. அதுட் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று யாரும் கோரவில்லை என்று கூட்டத்திற்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.