சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து முதல் நாளில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன் பின்னர் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இந்த சூழலில் சான் பிரான்சிஸ்கோவில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3ம் தேதி காலை சிகாகோ சென்றடைந்தார். சிகாகோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிகாகோ தமிழ்ச்சங்கத்தினர் உற்சாக வரவேற்வு அளித்தனர். இதையடுத்து, அமெரிக்காவில் டிரில்லியண்ட் நிறுவனத்துடன் (செப்.5ம் தேதி) ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
இந்நிலையில், சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் ஸ்னேர்ஸ் டிரேடியர்ஸ் உற்பத்தி மையத்தை ரூ.100 கோடி முதலீட்டில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், விஸ்டியன் நிறுவனத்தின் மின்னணு உற்பத்தி மையத்தை ரூ.250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.