யாழ்ப்பாணத்தில் அநுரகுமார தெரிவிப்பு!
13 நடைமுறைப்படுத்துவது அல்லது 13பிளஸ் வழங்குவது எனக் கூறுவது தெற்கு வேட்பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
5ம் திகதி வியாழக்கிழமை யாழ். விரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தனது ஜனாதிபதி பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களிடம் 13ஐ வைத்து வியாபாரம் செய்வதற்கு நான் வரவில்லை அந்த வியாபாரத்தை செய்யும் நோக்கமும் எனக்கு இல்லை.
தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் மக்களுக்கு 13ஐ காட்டி வாக்குகளை பெறும் முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
நான் தமிழ் மக்களிடம் 13 தருகிறேன் என வியாபாரத்தை கூற மாட்டேன் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதோடு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவேன்.
நாட்டில் நீண்ட காலமாக புரையோடி உள்ள இலஞ்சம் , ஊழல் வாதிகளை அப்புறப்படுத்தி புதிய இலங்கையை உருவாக்குவதே எனது இலக்கு அதற்காகவே மக்கள் எங்களோடு அணி திரண்டுள்ளனர்.
நாட்டு மக்கள் எம்முடன் நடு திரண்டுள்ள நிலையில் சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சீரழிக்கப் பார்க்கிறார்.
சஜித் பிரேமதாச 13 தரப் போகிறாரா அல்லது 13 பிளஸ் தரப் போகிறாரா என்பது தொடர்பில் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
நாங்கள் நாட்டை கொள்ளை அடிக்க வில்லை நாட்டு மக்களை கடனாளியாக்கவில்லை, நாட்டை கொள்ளையடித்தவர்களும் நாட்டை கடனாளியாக்கியவர்களும் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய சஜித் மற்றும் ரணில் பக்கமே உள்ளனர்.
இது ஏன் கூறுகிறேன் என்றால் ராஜபக்சர்கள் நாட்டை கொள்ளை அடித்து விட்டார்கள் என கூறிய ரணில் தரப்பினரில் சிலர் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசா பக்கம் உள்ளனர்.
அதேபோல மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடிகளை மூடி மறப்பதற்காக ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
இவருடன் ஊழல் மோசடிகளை தடுப்போம் என கூறி வந்த ஜனாதிபதி வேட்பாளர் ரனில் விக்ரமசிங்க பக்கத்தில் இருந்த சிலர் நாமல் ராஜபக்சவின் பக்கத்துக்கு சென்றுள்ளனர்.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் நாமல் ,சஜித் ,ரணில் அணிகள் நாட்டை திருடிய நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற நபர்களை உள்ளடக்கிய கூட்டமே பகுதி பகுதியாக மூவர் பக்கமும் பிரிந்து நிற்கின்றனர்.
இவர்களால் நாட்டை அழித்தவர்களை ஒன்றுமே செய்ய முடியாது ஏனெனில் மூவரும் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளார்கள்.
ஆகவே தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்கள் எதிர்பார்த்து உளள மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில் வடக்கு மக்களும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்க தயாராக வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.