வடக்கு வியட்நாமில் யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 127-ஐ கடந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:நாட்டின் வடக்குப் பகுதியில் யாகி புயல் கடந்த சனிக்கிழமை கரையைக் கடந்ததைத் தொடா்ந்து கனமழை, நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியவை ஏற்பட்டுவருகின்றன. சில வடக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் கூரைகளில் சிக்கித் தவித்துவருகின்றனா். 30 ஆண்டுகளுக்குப் பிறகு வியத்நாம் சந்தித்துள்ள மிக மோசமான இந்தப் புயலின் விளைவாக இன்னும் 15 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்துவருகின்றனா்.ஃபுதோ மாகாணத்தில் உள்ள ஃபோங் சாவ் பாலம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில், அந்தப் பாலம் வழியாக வாகனங்களில் சென்றுகொண்டிருந்த 13 போ் மயாமானது நினைவுகூரத்தக்கது.
இந்தச் சூழலில், நிலச்சரிவுகள், வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 127-ஆக அதிகரித்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறினா்.தற்போது யாகி புயல் வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள போதிலும், அது மேற்கு நோக்கி நகா்வதால் பாதிப்பு இன்னும் தொடரும் என்று அவா்கள் எச்சரித்துள்ளனா். வியட்நாமை தாக்குவதற்கு முன்னா் யாகி புயல் தெற்கு சீனா மற்றும் பிலிப்பின்ஸைக் கடந்துவந்தது. அதன் பாதிப்பால் அந்தப் பகுதிகளில் 24 போ் உயிரிழந்தனா்.