தமிழகத்தில் மதுக் கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மதுவிலக்கு மாநாடு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த மாநாடு நடக்க உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமாவளவன் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 10 அல்லது அதற்கும் கூடுதலான சீட்டுகளை பெறுவதற்காக அதிமுகவுக்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் இணைவது போல் ஒரு மாயாஜாலம் காட்டி திமுகவிடம் கூடுதல் சீட்டுகளை பெறத்தான் இந்த தேர்தல் அரசியல் நாடகத்தை திருமாவளவன் அரங்கேற்று இருப்பதாகவும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.திமுக மற்றும் திமுகவின் ஆதரவாளர்கள் சிலரும் தற்போது திருமாளவன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் எழுத தொடங்கிவிட்டனர். மேலும் மதுக்கடைகளை மூடினால் ஆபத்து, தமிழகத்துக்கே ஆபத்து, பல உயிரிழப்புகள் நேரிடும் என்ற ஒரு பிம்பத்தையும் கட்டமைக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன், திமுகவை மிரட்டுவதற்காக தான் திருமாவளவன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து திமுக அமைச்சர் ரகுபதி தெரிவிக்கையில், “எங்களை யாரும் மிரட்ட முடியாது. மிசாவை கண்டே அஞ்சாதவர்கள் நாங்கள்.விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்களுடைய தோழமைக் கட்சிதான். தோழமைக் கட்சிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மதிப்பு கொடுத்து வருகிறார். திருமாளவன் எங்களை மிரட்ட வேண்டியதும் இல்லை, மிரட்டவும் மாட்டார் என்று அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.