பொது வேட்பாளரை முதலில் இந்தியாவின் ப்ரொஜெக்ட் என்று அழைத்தார்கள். பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முதலில் வைத்த மு.திருநாவுக்கரசு தமிழகத்தில் தங்கியிருப்பதனால், அவர் இந்தியாவின் ஆள் என்ற சந்தேகம். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை தொடர்ந்து வளர்த்துச் சென்றபடியால் அதுவும் இந்தியாவின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம். இம்முறை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த விடயத்தை கையில் எடுத்தார். அதனால் அது இந்தியாவினுடையதாகத் தான் இருக்கலாம் என்ற சந்தேகத்தை முன் வைத்தவர்கள் மேலும் உஷாரானார்கள். அதன் பின் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு காணொளி ஊடகம் அந்த விடயம் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தியது. அந்தக் காணொளி ஊடகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு குடிமக்கள் சமூகத்தின் பிரதானியாக இருப்பவர் 13ஆவது திருத்தத்தை தொடர்ச்சியாக ஆதரித்து வருபவர். அவர் அதை வெளிப்படையாகத்தான் செய்கிறார். எனவே அந்த சிவில் சமூகம் இந்த விடயத்தைக் கையில் எடுத்த காரணத்தால் அது இந்தியாவினுடைய வேலையாகத் தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலும் அதிகரித்தது.
மேற்சொன்ன விடயங்கள் அவ்வளவும் போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு. எதுக்கெடுத்தாலும் அது இந்தியாவின் சதி என்று குற்றம் சாட்டும் அக்கட்சியானது, பொது வேட்பாளர் விடயத்தை இந்திய அடிவருடிகளின் வேலை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.
அதே சமயம் பொது வேட்பாளரைக் கண்டு பயப்படும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியானது அதனை வேறு விதமாக அணுகியது. சுமந்திரன் இந்தியத் தூதுவரை சந்தித்து பொது வேட்பாளர் தொடர்பாகவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் அவர் தெரிவித்த கருத்துக்களை அவருக்கு விசுவாசமான பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியே கொண்டு வந்தார். அந்தச் செய்திகள் யாவும் இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை; தென்னிலங்கையில் உள்ள யாரோ ஒரு வேட்பாளரோடு பேச்சுவார்த்தைக்கு போகுமாறு கேட்கிறது என்பதைச் சாராம்சமாகக் கொண்டிருந்தன.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கைக்கு வந்த எந்த ஒரு இந்திய பிரதானியும் இதுவரை பொது வேட்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்பதே தொகுக்கப்பட்ட அவதானிப்பு ஆகும்.
தமிழரசு கட்சிக்குள் சிறீரீதரன் அணி பொது வேட்பாளரை வலிமையாக ஆதரிக்கிறது. சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான மோதலுக்குள் பொது வேட்பாளர் எப்பொழுதோ சிக்கிவிட்டார். இந்நிலையில் சிறீதரனை பலவீனப்படுத்துவதற்கும் பொது வேட்பாளரைப் பலவீனப்படுத்துவதற்கும் இந்தியா பொது வேட்பாளர் என்ற தெரிவைக் குறித்து மகிழ்ச்சியாக இல்லை என்ற செய்தியை சுமந்திரனுக்கு நெருக்கமான பத்திரிகைகள் அடிக்கடி பிரசுரித்தன.
இந்திய ராஜதந்திரிகள் மற்றும் பிரதானிகளின் கருத்துக்களை பொது வேட்பாளருக்கு எதிராக வியாக்கியானப்படுத்துவதில் சுமந்திரனுக்கு ஆதரவான பத்திரிகைகள் தீவிரமாக உழைத்தன.
ஆனால் இந்த இடத்தில் அப்பாவித்தனமான ஒரு கேள்வி எழும். பொது வேட்பாளர் இந்தியாவின் ப்ரொஜக்ட் என்றால் பிறகு ஏன் இந்திய ராஜதந்திரிகளும் பிரதானிகளும் அவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்கள்?
கடந்த வாரத்துக்கு முதல் வாரம் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் டோவால் கொழும்புக்கு வந்திருந்தார். அவர் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். அச்சந்திப்பின் போது அவர் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு அதாவது பொது வேட்பாளரை முன்னிறுத்தும் பொது கட்டமைப்புக்குள் அங்கும் வகிக்கும் கட்சிகளும் கலந்து கொண்டன. எனவே அக்கட்சிகளுக்கும் அவர் சொன்ன செய்தி அதுதான். இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்பதனை அவர்கள் மறைமுகமாக உணர்த்த முற்படுகின்றார்கள். இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அவ்வாறு கூறிய பின்னரும் அது இந்தியாவின் ப்ரொஜக்ட்தான் என்று நம்புகிறவர்கள் இப்பொழுதும் நாட்டில் உண்டு.
இந்த விடயத்தோடு தொடர்புடைய மற்றொரு சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் கிளிநொச்சிக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சமத்துவ கட்சியின் தலைவர் சந்திரகுமாரை சந்தித்திருக்கிறார்கள். அதன்பின் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களையும் சந்தித்திருக்கிறார்கள்.
மேற்படி சந்திப்பானது சிறீதரனுக்கு சில செய்திகளை உணர்த்தும் நோக்கிலானது என்று அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படுகின்றது. சிறீதரனுடைய பலமான கோட்டை ஆகிய கிளிநொச்சியில் அவருடைய அரசியல் எதிரியான சந்திரக்குமாரை அவருடைய அலுவலகத்திலேயே இந்தியத் துணைத் தூதுவர் தேடிச்சென்று சந்தித்து அவருக்கு ஒரு அந்தஸ்தை கொடுத்தமை என்பதும், சந்திப்பின்போது சஜித் பிரேமதாசாவை ஆதரிக்குமாறு சூசகமாக வலியுறுத்தியமை என்பதும் சிறீதரனுக்கு சில விடயங்களை உணர்த்தும் நோக்கிலானவை. அதாவது பொது வேட்பாளரின் விடயத்தில் இந்தியா ஆதரவாக இல்லை. எனவே பொது வேட்பாளருக்கு எதிராக சஜித்தை ஆதரிக்கும் சந்திரகுமாரை தேடிச் சென்று சந்தித்ததன் மூலம் இந்தியா அதன் நிலைப்பாட்டை சிறீதரனுக்கு மறைமுகமாக உணர்த்த முற்படுகின்றது.
எனினும் அச்செய்தி வெளிவந்த பின்னர்தான் சிறீதரன் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அவருடைய கட்சி செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் எவ்வாறு பொது வேட்பாளருக்கு ஆதரவான பணிகளை திட்டமிட்டுப் பரவலாக்கலாம் என்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அதாவது சிறீதரன் பொது வேட்பாளரின் விடயத்தில் தொடர்ந்து உறுதியாக நிற்கிறார் என்ற செய்தி அந்த கூட்டத்தில் உண்டு.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறீதரனுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ள முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதன் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அதுவும் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்பதனை வெளிப்படுத்தியது.
இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இப்பொழுது ஓரளவுக்கு வெளிப்படையாகத் தெரிய தொடங்கிவிட்டது.ரணில் விக்கிரமசிங்க புத்திசாலி; தந்திரசாலி; முதிர்ச்சியானவர். அவர் மீது நேரடியாக போர்க் குற்றச்சாட்டுகள் இல்லை. அதனால் அவர் எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்துச் சமாளிக்கக் கூடியவர் என்பது ஒரு பொதுவான அவதானிப்பு ஆகும்.அவ்வாறு எல்லா நாடுகளையும் சம தூரத்தில் வைத்துக் கையாளக்கூடிய ஒரு தலைவர் தெரிவு செய்யப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்பது ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க வை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான தேர்தல் நடந்த பொழுது தெரிய வந்தது. அதில் இந்தியா ரணிலுக்கு எதிராக நின்ற டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்குமாறு தமிழ் கட்சி த் தலைவர்களை கேட்டிருந்தது.
எனவே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு இப்பொழுது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தென்னிலங்கையில் உள்ள யாரோ ஒரு பிரதான வேட்பாளரைத்தான் தமிழ்த் தரப்பு ஆதரிக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாகும். கடந்த சில வார கால நகர்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா வெளிப்படையாகவே சஜித்தை ஆதரிக்குமாறு கேட்கிறது என்று தெரிகிறது. அப்படியென்றால் இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று பொருள். அப்படியென்றால் பொது வேட்பாளர் இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று கூறுபவர்கள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்?
இந்தியாவே பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று தெரிந்த பின்னரும் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் அணியை இந்தியா இயக்குகிறது என்று கூறுவது எந்த வகை அறிவியல் ?
அதைவிட மேலும் ஒரு ஆழமான கேள்வியை இங்கு கேட்கலாம். உலகில் உள்ள எந்த ஒரு பேரரசும் அயலில் உள்ள சிறிய இனத்தை அல்லது நாட்டை ஒற்றுமைப்படுத்த விரும்புமா? அல்லது “டிவைட் அண்ட் ரூல்” என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது போல பிரித்துக் கையாள முயற்சிக்குமா? இந்தப் பூமிப் பந்தில் சிதறிப் போய் இருக்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை ஒற்றுமைப்படுத்தும் செயல்பாடுகளை பக்கத்து பேரரசு ஒன்றின் சதி வேலை என்று சந்தேகிக்கும் புத்திசாலிகள் ஈழத்தமிழர்கள் மத்தியில் மட்டும் தான் இருக்கிறார்களா? இவர்களை யாராவது நல்ல மனநல மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு போக மாட்டார்களா?