ஆந்திர வெள்ள நிவாரண நிதியாக நடிகர் சிலம்பரசன் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார்.
வெள்ள பாதிப்பு ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, குண்டூர், விசாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அவர்களை மீட்டு பாதுகாப்பாக இடங்களில் தங்க வைத்தனர். இந்தநிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திரை பிரபலங்கள் பலரும் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
முதல்வரின் வெள்ள நிவாரண நிதியாக ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மகேஷ் பாபு இருவரும் தனித்தனியே 1 கோடி ரூபாய், அல்லு அர்ஜுனும் ரூ.1 கோடி மற்றும் நடிகர் பிரபாஸ் ரூ. 5 கோடி வழங்கியுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு முதல்வர் நிவாரண நிதியாக நடிகர் சிலம்பரசன் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது: ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் சிலம்பரசனுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.