சிவா பரமேஸ்வரன்
போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை வழங்குதல் என்கிற கால்பந்து மீண்டும் இலங்கை அரசிடம் உதைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தலையீடு தேவை என்று தமிழர்கள் கோரிவந்த நிலையில், நீதி வழங்குதல் என்ற அந்த பந்தை இப்போது புதிதாக ஆட்சிக்கு வரவுள்ள இலங்கை அரசிடமே மீண்டும் தள்ளிவிட்டுள்ளது ஐ நா மனித உரிமைகள் பேரவை.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் சர்வதேச தலையீட்டிற்கான கோரிக்கையை தொடர்ந்து நிராகரிக்கும் இலங்கை அரசு இந்த விடயத்தில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளுக்கு உள்நாட்டு பொறிமுறைகள் மூலமே கையாள தம்மால் முடியும் என்று கூறி வருகிறது.
இலங்கையில் நிலவும் மனித உர்மைகள் சூழல் தொடர்பில், வாய்மொழியாக அளித்த அறிக்கை ஒன்றில், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதற்கான பொறுப்பை அடுத்து ஆட்சியிடம் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டுர்க் ஒப்படைத்தார்.
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறுகிறது.
இதுவரை கொடுக்கப்பட்டு நிறைவேற்றப்படாத உறுதிப்பாடுகளை செயல்படுத்தும் பொறுப்பை, இன்னும் சில நாட்களில் ஆட்சிக்கு வரவுள்ள புதிய ஜனாதிபதியிடம் ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அளித்துவிட்டார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில் சமர்ப்பித்த தனது அரிக்கையில், முன்னர் ஆட்சியில் இருந்த அரசுகள் அந்த பேரவைக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்பதை புதிதாக ஆட்சிக்கு வரவுள்ள அரசுக்கு நினைவூட்டினார்.
“இலங்கையில் ஜனாதிபதி தேர்தலும், அதையடுத்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் பொறுப்புக்கூறல், நீதி வழங்குவது மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உறுதியளிக்கும் அதேவேளை அதை நோக்கிய இடைக்கால மாற்றங்களுக்கு தாங்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்”
ஐ நா மனித உரிமைகள் பேரவையில் ஆணையர்களாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறல் மற்றும் தவறிழைத்தவர்கள் நீதியின் முன்னர் நிறுத்தப்படுவது ஆகியவற்றை இலங்கை அரசிடம் வலியுறுத்தி வந்தாலும், அந்த கோரிக்கைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இலங்கை தற்போது நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் உள்ளது என்றும், அது பழைய நிலைப்பாடுகளை உடைத்தெறிந்து புதிய பாதையை நோக்கி நகர வேண்டும் என்று வோல்கர் டுர்க் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நீண்டகாலமாக இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள், போரினால் பாதிக்கபட்ட மக்களுக்கு நீதியை வழங்க தவறிவிட்டன என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான அறிக்கையிடலின் போதே இது தெரிவிக்கப்பட்டது.
“இலங்கையில் மோசமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. எனினும் அதில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தார் இன்னும் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளுக்காக காத்திருக்கின்றனர்”.
எனினும் பாரிய மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை இழைத்ததாக குற்றஞ்சாட்டப்படுபவர்கள் மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து அவரது வாய்மொழி அறிக்கையில் வெளிப்படையாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இடம்பெறும் ‘கவலையளிக்கும் போக்குகள்’ குறித்து சுட்டிக்காட்டி பேசிய அவர், அடிப்படை உரிமைகளுக்கான அச்சுறுத்தல் தொடருவது, பிற்போக்குச் சட்டங்கள், ஜனநாயக ரீதியில் கண்காணிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளில் தேய்மானம், பொதுச் சமூகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் மிரட்டி பணியவைப்பது ஆகியவற்றை காண முடிகிறது என்று தெரிவித்தார்.
’அரகலய’ மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு பிறகு ‘புதிய தொடக்கம்’ இன்று ஜனாதிபதி அளித்த உத்தரவாதம் பெரும்பாலும் ‘நிறைவேற்றப்படாமலேயே உள்ளது”.
”சட்டவிரோதமாக கைதுகள் மற்றும் சித்திரவதை உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் ஆகியவை தொடருகின்றன என்பதை அங்கு ந்டைபெறுவது வெளிச்சம் போட்டு காட்டுகிறது, மேலும் ஆழமான சீர்திருத்தங்கள் இல்லாத நிலையில், எதிர்காலத்தில் உண்மையான அபாயங்கள் இருப்பதையும் கோடிட்டு காட்டுகிறது”.
தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருக்கும் கலாச்சாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்த வோல்கர் டுர்க், அது அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதோடு மட்டுமில்லாமல் மீறல்கள் தொடருவதற்கும் மேலும் ஊழல் அதிகரிப்பதையும் உக்குவிக்கும் என்றார்.
“பொறுப்புக்கூறல் இல்லையென்றால், வன்முறை கலாச்சாரம் தொடர்ந்து மேலும் வன்முறையை ஊக்குவிக்கும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படாதது நாடுகளையும், சமூகங்களையும் பலவீனப்படுத்தும் புற்றுநோய் போன்றது”.
நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் காலத்திலும் அதற்கு பின்னரும் அரசு கருத்துச் சுந்தந்திரம், அமைதியாக ஒன்றுகூடுதல் ஆகியவற்றை முழுமையாக பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் மேலும் கருத்து வெளியிடும் போது, தமது அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக, துன்புறுத்தல், கண்காணிக்கப்படுவது, ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர், பாதிக்கபப்ட்டவர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் ஆகியோர் அச்சுறுத்தி பணியவைக்கப்படுவது குறித்து முறைப்பாடுகள் வருகின்றன, அது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார்.
பொலிசார் மற்றும் பாதுகாப்பு படைகளின் அத்துமீறல்கள் தொடருகிறது என்றும், சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்படுவது, சித்தரவதை ஆகியவை குறித்தும் தமது அலுவலகத்திற்கு குற்றச்சாட்டுக்கள் வருகின்றன என்றும் கூறினார்.
“நிகழ்காலம் மற்றும் கடந்த காலக்களில் இடம்பெறும் மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறல் இல்லாத நிலை ஒரு அடிப்படை பிரச்சனை என்றும், இதை அடையாளப்படுத்தும் வழக்குகளில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் இல்லாததன் மூலம் நிரூபிக்கப்படுகிறது”.
“மேலும் இன்று, பாரிய மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், மூத்த பொறுப்புகளில் தொடர்ந்து நியமிக்கப்படுகிறார்கள்”.
அவ்வகையில் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமையானது ஆழமாக வேரூன்றியுள்ளது. அதன் காரணமாக ஊழல், அதிகார துஷிபிரயோகம் மற்றும் அரச நிர்வாகத்தின் தோல்வி ஆகியவை ஏற்பட்டன. இவைகளே நாட்டின் அண்மைய பொருளாதார நெருக்கடிகளுக்கு அடிப்படை காரணங்களாக உள்ளன என்று வோல்கர் டுர்க் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தாய்மார்கள், மனைவிகள், சகோதரிகள் ஆகியோர் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்பிற்குரிய உறுவுகளை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தேடி வரும் நிலையில், அரசால் நிறுவப்பட்ட காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான அலுவலகம் இதுவரை ஒருவரைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இது குறித்த தனது கரிசனைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். எனினும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பங்கள் கோருகின்றபடி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது போன்று குறிப்பிட்ட எந்த நடவடிக்கையையும் அவர் பரிந்துரைக்கவில்லை.
”அவர்களின் குடும்பங்கள் திருசங்கு சொர்க்கம் என்ற நிலையில் சிக்கி பதில்களுக்காக காத்திருக்கின்றனர். மேலும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவுமில்லை.
இது மாற வெண்டும். மேலும் அதுவே போர்க்காலத்தில் இடம்பெற்ற பாரிய மீறல்கள், அரச மற்றும் பாதுகாப்பு படையினர் நடந்துகொண்ட விதம், மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தொடர்ச்சி ஆகியவற்றை முறையாக ஏற்பதன் தொடக்கமாக இருக்கும்”.
கடந்த காலங்களில் இடம்பெற்றவைகளை கையாள்வது மற்றும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தாமல் இருப்பது, பழைய மோதல்களை மீண்டும் உருவாக்கும், புதிய மோதல்களை ஏற்படுத்தும் மேலும் எதிர்கால மோதல்களுக்கும் வழி வகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனினும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க நேரடியாக எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் முன் வைக்காத வோல்கர் டுர்க், கடந்த காலத்தில் நடைபெற்றவைகள் மூடப்பட வேண்டும் என்றும் மக்கள் மற்றும் சமூகங்கள் நீண்டகாலமாக எழுச்சி மற்றும் துயரங்களை எதிர்கொண்டுவிட்டனர் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.
“கடந்த காலத்தில் நடைபெற்றவைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இது சரியான சமயம். மேலும் வன்முறைகளை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை அதிகரிக்க செய்யும் அந்த அழிவு சுறழ்ச்சியை முறியடிக்கப்பட வேண்டும்”.
இதேவேளை இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இருக்கும் இடைவெளியை நிரப்ப, ஐ நா உறுப்பு நாடுகள், தமது அலுவலகமான ஐ நா மனித உரிமைகள் ஆணையரின் அலுவலகத்தின் பணிகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு, ஐ நா மனித உரிமைகள் ஆணையரின் அலுவலகம் இலங்கையில் பொறுப்புக்கூறல் திட்டத்தை (SLAP) ஏற்படுத்தி, அங்கு இடம்பெற்ற மீறல்கள், மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் மற்றும் இதர குற்றங்கள் ஆகியவை குறித்த ஆதாரங்களை திரட்டுவதற்காக அமைத்தது.
ஐ நா மனித உரிமைகள் ஆணையருக்கு ஜெனீவாவில் பதிலளித்த இலங்கை அந்த பொறிமுறைக்கு (SLAP) அந்த பேரவையின் ஒருமித்த ஒப்புதல் இல்லை என்பதால் அதன் தாங்கள் நிராகரிப்பதாகவும் தெரிவித்தது.
”பொருளாதார மீட்டெடுப்பிற்கு சமாந்திரமாக, அரசு கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட காயங்களை ஆற்றுப்படுத்தவும், பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூகங்கள் ஆகியோர் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று ஜெனீவாவிலுள்ள ஐ நா அலுவலகங்களுக்கான இலங்கை நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹிமாலி சுபாஷினி அருணதிலக தமது பதிலுரையில் கூறினார்.
”இந்த நடவடிக்கைகளில் முன்னாள் போராளிகள் மற்றும் சிறார் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது, வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றி மேம்படுத்துவது, இழப்பீடுகளை அளிப்பது, உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்துவது, தனியார் காணிகளை அதன் முறையான உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது, வாழ்வாதார உதவிகளை அளிப்பது மற்றும் காணாமல் போனவர்களை தேடுவது தொடர்பிலானவைகளும் அடங்கும்”.
மேலும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, உள்நாட்டு பொறிமுறையாக, காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் (OMP), தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாட்டிற்கன அலுவலகம் (ONUR), வெளிநாட்டு இலங்கையர்களுக்கான அலுவலகம் மற்றும் உண்ம மற்றும் பொறிமுறைக்கான இடைக்கால செயலம் (ISTRM) ஆகியவை நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் ஐ நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவித்தார்.