(கனடா உதயனின் சிறப்பு புலனாய்வு கட்டுரை)
நடராசா லோகதயாளன்.
ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தன்னத்தானே விளித்துக்கொள்கிறது. அப்படி என்ன அதிசயம் என்று கேட்டால், அது பல வகைகளில் உள்ளது என்கிற பதில் வரும். இயற்கை அழகு, அருமையான தேயிலை, அழகான கடற்கரைகள் என்று அரசு அடுக்கிக்கொண்டே செல்லும்.
மறுபுறம் வேறு சில அதிசயங்களும் உள்ளன. கொடூரமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆனாலும் பொறுப்புக்கூறல் இல்லாமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட இதுவரை கண்டுபிடிக்கப்படாதது, தொடர்ந்து வளமான விளைநிலங்களை அபகரிக்க முயல்வது, தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை பௌத்தமயமாக்க விழைவது என்று அப்படியொரு அதிசயப் பட்டியலும் நீளூம்.
இப்போது மேலும் ஒரு அதிசயம் நமது புலனாய்வில் தெரியவந்துள்ளது. அதுவும் ஏதோ ஆதாரமில்லாத எழுந்தமானகமோ கூறப்படும் செய்தியாக இல்லாமல், ஆதாரத்துடன் நிரூபிக்கிறது ’கனடா உதயன்’.
அது என்ன அதிசயம் இப்போது? வேறொன்றும் இல்லை. நாட்டில் பல லட்சம் கால்நடைகளுக்கு போதிய உணவில்லாத நிலையில், அவர்களுக்கான ஒரு முக்கிய உணவுப் பொருளாகவும் உள்ள தவிடு கூட இப்போது உள்நாட்டு ஆடு மாடுகளுக்கு கிடைக்காமல், வெளிநாட்டுப் பன்றிகளுக்கு உணவாக ஏற்றுமதி செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரிவாகப் பார்ப்போம்:
கோதுமைத் தவிட்டினை ஏற்றுமதி செய்து கால் நடைகளின் வயிற்றிலும் அடிக்க ”நாட்டை பொருளாதாரத்திலிருந்து மீட்டெடுத்து மீண்டும் கட்டியெழுப்ப விழைகின்ற” ரணில் அரசு துணிந்துவிட்டமை 2024-09-09 அமைச்சரவையின் தீர்மானத்தில் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை வாழ் மக்களின் வயிற்றில் அடித்த அரசு தற்போது கால்நடைகளையும் விட்டுவைப்பதாக இல்லை. அவற்றின் வயிற்றிலும் அடிக்க எண்ணிவிட்டாரகள்.
நாட்டின் தேவைக்காக இறக்குமதி செய்யும் கோதுமையினை பிரித்தெடுக்கும்போது அகற்றப்படும் கோது மற்றும் தவிடு தற்போது கால்நடைகளின் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இவை கோதுமைத் தவிடு மற்றும் கோதுகளாக சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்ற காலத்திலேயே கால்நடைகளிற்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
கால்நடைகளின் ஒரு பிரதான உணவாகவும் தவிடு தெற்காசிய நாடுகள் எங்கும் பயன்படுத்தப்படுகிறது. அதில் புரதச்சத்தும், நாற்சத்தும் கூடுதலாக இருப்பதால், காலநடைகளின் ஆரோக்கியத்திற்கும், கூடுதலாக பால் சுரப்பதற்கு ஏதுவாக உள்ளது என்பது அறிவியல் ரீதியான உண்மை.
இந்த நிலையில் கோதுமையில் இருந்து அகற்றப்படும் கோதுமைத் தவிட்டினை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய நாட்டின் விவசாய பெருந்தோட்ட அமைச்சு 2024-09-09 ஆம் திகதி அமைச்சரவைக்கு ஓர் பத்திரத்தை சமர்ப்பித்து அனுமதி பெற்றுள்ளது.
இதன்மூலம் கோதுமைத் தவிடு சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய அரசு இரகசிய முயற்சியில் ஈடுபட்டுள்ளமை நிரூபணமாகிவிட்டது.
இலங்கையில் தற்போது காணப்படும் 25 லட்சம் கால்நடைகளிற்கு ஆண்டுதோறும் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பண்ணையாளர்கள் தவித்து வருகின்றனர். இதில் வடக்கு கிழக்கு பெரும் காடு உள்ள மாவட்டங்களில்கூட மேய்ச்சல்தரை, மழை காலத்தில் பராமரிப்பு இடம் இடம் இன்றி ஆண்டுதோறும் பல நூறு கால் நடைகள் உயிரழக்கின்றன. ஆயிரக் கணக்காண மாடுகளை வளர்ப்பவர்கள் கால் நடைத் தீவணத்தினை வாங்கும் வசதியின்றியே ஆடு,மாடுகள் தீவணம் இன்ற இறக்கும் சூழல் காணப்படுகின்றது. இதன் காரணமாக தமிழர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கால் நடை உணவு வகைகளின் விலை அதிகரிப்பின் காரணமாகவே பல ஆயிரம் கால் நடை வளர்ப்புகள் கை விடப்பட்டதன் எதிரொலியாகவே இன்று பால் மா மற்றும் முட்டை, இறைச்சி என்பன இறக்குமதி செய்யும் நிலையில் நாடு உள்ளது.
இவை எவற்றினையும் கருத்தில் எடுக்காத அரசு கோதுமைத் தவிட்டினை சீன நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிப்பதன் பின்னணியில் மறைந்துள்ள இரகசியம் உடனடியாக கண்டுகொள்ள முடியாதுள்ளது.
இலங்கை தனக்குத் தேவையான கோதுமையை இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போது சீனா ஏன் இதனை நாடுகின்றது என்பது தொடர்பில் பொருளாதார ரீதியிலும் சந்தேகங்கள் எழக்கூடும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 12 பால்மாடுகளை முழுநேர வாழ்வாதார தொழிலாக கொண்ட அளவெட்டியைச் சேர்ந்த 69 வயதான நாகராசா தேவன். போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களைப் போலவே இவரும் தனது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரும்பாடுபட்டு வருகிறார். பெற்ற பிள்ளைகளைப் போன்றே தனது பால்மாடுகளை பராமரித்து வரும், அவற்றுக்கு வயிறார உணவளிக்க முடியவில்லை என்றால், தனது வாழ்க்கையில் பலனேதும் இல்லை என்று வருந்துகிறார்.
”35 வருடமாக இந்த தொழிலையே நம்பி வாழ்கின்றேன். பெரும் நெருக்கடியின் மத்தியில் விலை ஏற்ற இறக்கங்களுடன் தற்போது கால் நடைத் தீவணம் கிடைக்கின்றது. அதனையும் அரசு இலாபம் பார்க்கும் நோக்கில் ஏற்றுமதிக்கு திட்டமிட்டுவிட்டது. இதனால் 2022 ஆம் ஆண்டு விவசாயிகள் வீதியில் இறங்கிய பின்பு நாடே வீதிக்கு வந்தது. அவ்வாறான ஓர் நிலையை கால்நடை வளர்ப்பாளர்கள் மூலம் அரசு திரும்பவும் ஏறபடுத்த முயற்சிக்கின்றது. ஏனெனில் போர் காலத்தில் கூட உடமைகள் அனைத்தையும் இழந்தபோதும் எமது கால் நடைகளையே எடுத்துச் சென்ற எம்மை அரசு புதுவடிவில் வஞ்சிக்க எண்ணுகின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது” என்றார்.
இவை தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் பொருளாதரத்துறை பேராசிரியர் சி.விஜயகுமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது:
”சீனா தனக்குத் தேவையான கோதுமையை தானே உற்பத்தி செய்யும் வல்லமை கொண்டுள்ள ஓர் நாடு. ஏன் இலங்கையை நாடுகின்றது என்பது புரியாவிட்டாலும் கோதுமைத் தவிட்டினை ஏற்றுமதி செய்வதன் மூலம் நிச்சயமாக எமது நாட்டில் பற்றாக்குறை ஏற்படும். விலை அதிகரிப்பினை ஏற்படுத்தும் அதனால் கால்நடை உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். ஏற்றுமதியின் அளவுகள் அதிகரிக்கும்போது உற்பத்தியின் தரமும் குறைவடையும் இதனால் எமது நாட்டின் கால் நடைகளிற்கும் நிறைவான உணவு கிடைக்காத தன்மையே ஏற்படும்” என்றார்.
இது தொடர்பில் கொழும்பு பல்கலைக் கழக பொருளியல்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்,
”சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்றால் அது சீனாவில் உள்ள ஓர் நிறுவனம் தனது இலாபம் கருதி இந்த கோரிக்கையினை முன் வைத்திருக்கும். அது எந்த வகையிலான இலாபம் என்பது உடனடியாக கண்டுகொள்ள முடியாது.
இங்கே ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை விடவும் வேறு நோக்கம் அரசியல் ரீதியிலான பொருளாதார நன்மை கருதிய வர்த்தகமாக இருக்கலாம்.
கோதுமை இறக்குமதி என்பதற்காக கோதுமை தவிடு ஏற்றுமதி செய்யக்கூடாது எனக் கூற முடியாது. ஏனெனில் பெற்றோலும் இறக்குமதி ஆனாலும் ஏற்றுமதியும் உண்டு. அதேநேரம் கோதுமையில் இருந்து அகற்றப்படும் தவிடு உள்நாட்டு கால் நடைகளிற்கான பிரதான உணவுத் தேவைக்கான மூலப் பொருளாக இருக்கும் நிலையில், தனியாக கால்நடை தீவனம் என்ற பெயரில் இறக்குமதி செய்யும் ஓர் நாட்டில் இப்படியாக கிடைக்கும் மூலப் பொருளையும் ஏற்றுமதி செய்ய முயற்சிப்பது அந்த சமூகத்தை அதாவது கால் நடை வளர்ப்பாளர்களை எண்ணிப்பார்க்காத செயல். அதாவது அவர்களது வாழ்வாதாரத்தையும், நாட்டின் பால் உற்பத்தியையும் புறந்தள்ளும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.
தற்போது கிடைக்கும் கோதுமைத் தவிடு உள்நாட்டுத் தேவைக்கு அதிகமானதா, போதாமையாக உள்ளதா அல்லது ஆண்டு ஒன்றிற்கு எவ்வளவு தேவை போன்ற புள்ளி விபரங்களை முதலில் அரசு வெளியிட வேண்டும். பின்னர் பண்ணையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் பின்னரே ஏற்றுமதிதொடர்பில் ஆராய வேண்டும். மாறாக எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்தால் இந்த நாட்டில் ஏற்கனவே ஒரு அனுபவம் உண்டு அதுதான் விவசாயிகளின் கருத்தைக் கேட்காது பசளைகளைத் தடை செய்தமையின் விளைவை உலகு அறியும். இதுவுத் அந்த செயலிற்கு ஒப்பானது” என்றார்.
இது தொடர்பில் அரசியல் ரீதியிலான கருத்தை ததிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்”
”அரசின் இந்த முன்னெடுப்பு தவறானது. நாட்டில் உள்ள கால்நடைகளிற்கான வளத்தை ஏற்றுமதி செய்யும் முடிவு கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும். ஏனெனில் நாடு பூராகவும் 40 லட்சம் கால் நடைகள் இருந்தாலும் வடக்கில் மட்டும் 4 லட்சத்து ஆயிரத்து 674 மாடுகளும் , 2 லட்சத்து 12 ஆயிரத்து 348 ஆடுகளும், 24 ஆயிரத்து 383 எருமைகளும் என 6 லட்சத்து 38 ஆயிரத்து 405 கால் நடைகள் உள்ளதாக வடக்கு மாகாண கால்நடைத் திணைக்களத்தின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இவற்றில் எமது தேர்தல் மாவட்டமான யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கால்நடைகள் தீவணத்தில் மட்டுமே தங்கியுள்ளன. ஏனைய மாவட்டத்திலும் கணிசமான கால்நடைகள் இந்த உற்பத்தி தீவணத்தை நம்பியும் வாழும் சூழலில் கோதுமை தவிடு ஏற்றுமதி என்பது கால்நடைகளையும் பண்ணையாளர்களையும் மிகவும் நெருக்கடிக்குள் தள்ளும் ஓர் விடயம்” என்றார்.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் இது தொடர்பில் தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டார்.
”இலங்கையின் கால்நடைகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய பலவிதமான கால் நடை உணவுகள் இன்றுவரை இறக்குமதி செய்யப்படுகின்றது. அதில் உடனடி உணவாக புல் வகைகள்கூட இறக்குமதி செய்யும் நிலையில், மிகவும் புரதச் சத்து நிறைந்த இந்த கோதுமைத் தவிட்டை ஏற்றுமதி செய்வதன் மூலம் கால் நடைகளின் பால் கறவைகளின் அளவு அதிகளவில் குறைவடையும் அப்போதும் நாம் பால் மாக்களை இறக்குமதியை நம்பியே வாழ வேண்டிய அவலத்திற்கு தள்ளப்படுவோம்.
இந்த நிலை தொடர்ந்தால், கறந்த பால் என்பது எமது மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் எட்டாக்கனியாகவே இருக்கும். உள்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிட்டு, மற்றொரு நாட்டிலுள்ள பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது என்பது அப்பட்டமான துரோகச் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.
தீய உள்நோக்கம் கொண்ட இப்படியான ஏற்றுமதி,இறக்குமதியின் மூலமும் ஆட்சியாளர்கள் மட்டும் நன்மை அடைவர், தமிழ் பால் பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்பவர்களின் நிலை மேலும் பின்னடைவை சந்திக்கும்” என்றார்.