மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற சிறப்பு சட்ட சபைக் கூட்டத்தில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதாவை தாக்கல் செய்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசினார். இந்த நிலையில், மேற்கு வங்க ஆளுநர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்க மாட்டேன் என்றும், மாநிலத்தில் கிராமங்கள், நகரங்கள் என எங்கு திரும்பினாலும் கலவரமாகவே இருக்கிறது.மேலும் அரசியலமைப்பு விதிகளை நிலைகுலையச் செய்ததற்காக, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும், ஆளுநராக அரசியலமைப்பில் உள்ள அம்சங்களை பாதுகாப்பது எனது கடமை என்று கூறியுள்ளார். தற்போது இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.