‘எனக்கு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை அதிகம் உண்டு. காலம், நேரம், சூழல் சரியாக இருந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். வரும் 2026 தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்’ என லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது: எனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்ள நாங்கள் அங்கு சென்று கொண்டிருக்கிறோம். இயக்குநர் துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் படத்துக்கு இசையமைக்கிறார். மேலும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். தூத்துக்குடியைத் தொடர்ந்து வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும். படம் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு திரைக்கு வரும். படத்தின் தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்தப் படம் ஆக்ஷன் – த்ரில்லர் கதையாக இருக்கும்’ என்றார்.
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கூறுகையில், ‘கேரள உயர் நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உயர் நீதிமன்றம் தக்க உத்தரவு பிறப்பிக்கும் என நம்புகிறேன்’ என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘எனக்கு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை அதிகம் உண்டு. காலம், நேரம், சூழல் சரியாக இருந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். வரும் 2026 தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன். என்னுடைய கொள்கைகளுக்கு உடன்பட்டு வரும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமான பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.’ என தெரிவித்துள்ளார்.