அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்த சூழலில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பங்கேற்றபோது, டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார். துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றது. இதனால், அப்போது இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் டிரம்ப், மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது, திடீரென அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை டிரம்ப் பிரசார அமைப்பின் செய்தி தொடர்பாளரான ஸ்டீவன் சீயங் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.