கனடாவில் நடைபெற்ற ‘ தமிழ் பொதுவேட்பாளர்’ என்னும் எழுச்சிக்கு ஆதரவு வழங்கும் கூட்டத்தில் ராஜா யோகராஜா அழுத்தமாகத் தெரிவிப்பு
“கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலிலும் தமிழர் அரசியலிலும் பல கூறுகளாக பிரிந்து நின்ற எமது தமிழினம் ஒரு தேசமாக எழுந்த நின்று இணைந்து குரல் எழுப்பும் வாய்ப்பை ‘ தமிழ் பொதுவேட்பாளர்’ என்னும் எழுச்சி ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த முயற்சி ஒரு சாதாரணமான விடயமல்ல. தமிழ் மக்களாகிய எமது எதிர்காலத்தை தீர்மானிக்கவும் திட்டங்களைத் தயாரிக்கவும் ஏற்ற ஒரு ஆரம்பப் புள்ளியாகவே நாம் இந்த ‘ தமிழ் பொதுவேட்பாளர்’ என்னும் முக்கிய கருப்பொருளைக் கருத வேண்டும்.
கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகள்.போராளி இயக்கங்கள் மற்றும் அமைப்புக்கள் என பிரிந்து நின்ற தமிழ் மக்களாகிய நாம் இந்த அவசியமான தருணத்தில் ‘ தமிழ் பொதுவேட்பாளர்’ என்னும் கருத்தியலின் அடிப்படையில் ஒன்றுபட்டுள்ளோம். இந்த ஒற்றுமையையும் இணைவையும் நாம் இழந்து விடக்கூடாது. அதைக் கட்டிக் காக்க வேண்டும்.
எமக்கான ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்த பணியானது ஒரு சாதாரணமான ஒன்றாக இருக்கவில்லை என்பதை இந்த மண்டபத்தில் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் அறிவார்கள்.சுமார் எட்டு மாதங்கள் பல கலந்துரையாடல்களை நடத்திய பல சவால்களைச் சந்தித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பின்னரே தமிழ்ப் பொது வேட்பாளரை தெரிவு செய்யும் கட்டம் வந்தது. அதுவும் இலகுவானதாக இருக்கவில்லை. எனவே மிகவும் சிரமங்களையும் சவால்களையும் சந்தித்து முடிவு எடுக்கப்பட்ட ‘ தமிழ் பொதுவேட்பாளர்’ என்னும் கருத்தியல் அழிக்கப்பட்டோ அன்றி ஒதுக்கப்பட்டோ போய்விடக்கூடாது. நாம் அனைவரும் ஒன்று பட்டு இந்த கருத்தையும் எழுச்சியையும் பயன்படுத்த வேண்டும்.
மறுபக்கத்தில் சுமந்திரன் போன்றவர்கள் இதை எதிர்க்கின்றார்கள். சுமந்திரன் போன்றவர்கள் கடந்த 40 வருடங்களுக்கு முன்னர் எமது போராட்டத்தின் ஆரம்பக் கால கட்டத்தில் றோயல் கல்லூரியிலும் சட்டக்கல்லூரியிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் உயர் கல்வியை மேற்கொண்டிருந்த எத்தனையோ தமிழ் மாணவர்கள் விடுதலை இயக்கங்களில் இணைந்து போரிட்டு தங்கள் உயிர்களையும் அர்பபணித்துள்ளார்கள் . ஆனால் இவ்வாறான அர்ப்பணிப்பையோ அன்றி தியாகத்தையோ செய்யாத சுமந்திரன் தான் கல்வி கற்று முடித்துவிட்டு எங்கள் வரலாற்றை விளங்கிக் கொள்ளாதது போன்று பொய்களைச் சொல்லி வருகின்றார். அல்லது மறுக்கின்றார். அவ்வாறனவர்களும் நாம் உண்மையை எடுத்துரைக்கும் வண்ணம் ‘ தமிழ் பொதுவேட்பாளர்’ என்னும் கருத்தியல் போராட்டம் வெற்றி பெற உழைக்க வேண்டும். மேலும் எமது தற்போதைய ஒற்றுமையை மேலும் வலுப்பெறச் செய்யவும் நாம் கடுமையாக தொடர்ந்து உழைக்க வேண்டும்”
இவ்வாறு கனடாவில் நடைபெற்ற ‘ தமிழ் பொதுவேட்பாளர்’ என்னும் எழுச்சிக்கு ஆதரவு வழங்கும் கூட்டத்தில் உரையாற்றிய ஈபிஆர்எல்எவ் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ராஜா யோகராஜா அழுத்தமாகத் தெரிவித்தார்.
கனடா மார்க்கம் நகரில் உள்ள கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைமையக கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவரது உரை முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.
அங்கு உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த திரு வீர சுப்பிரமணியம் அவர்களும் தனது உரையில் சில முக்கியமான தகவல்களை எடுத்துரைத்தார்.
அவர் தனது உரையில் “இலங்கை தமிழரசுக் கட்சியின் அதிகளவு அங்கத்தவர்கள் ‘ தமிழ் பொதுவேட்பாளர்’ என்னும் கருத்தியல் ஆயுதத்தை தமது கைகளில் கொண்டுள்ளார்கள். மாறாக தன்னலம் கொண்ட சில தமிழ் தலைவர்களே ஏனைய ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களை ஆதரிக்கின்றார்கள். பல தியாகங்களை அரங்கேற்றிய திருகோணமலை மண்ணின் மைந்தர்கள் சேர்ந்து ‘ தமிழ் பொதுவேட்பாளர்’ என்னும் அம்சத்தை வரவேற்று அங்கு தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். வடக்கு கிழக்கு எங்கும் ‘ தமிழ் பொதுவேட்பாளர்’ என்னும் கருத்தியலுக்கும் அரசியல் எழுச்சிக்கும் ஆதரவு பெருகி வருகின்றது. எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தொடர்ச்சியாக உழைத்து எமது இனத்தைக் காப்பாற்றுவோம்” என்றார்.
மேற்படி கூட்டத்தில் நிமால் விநாயகமூர்த்தி உட்பட சிலரும் உரையாற்றினார்கள்.