கனடாவில் கவிஞர் ‘ஆரணி’ யின் நினைவிடைத்தோய்தல்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி புகழாரம்
“தாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களே இலக்கியவாதிகளாக பிரகாசிக்கின்றார்கள். அத்துடன் அவர்கள் சமூகத்தின் அங்கமாக விளங்கும் மாந்தர், அரசு மற்றும் அமைப்புக்கள் ஆகியவற்றை நாடி பிடித்துப் பார்த்து தமது அவதானிப்பை கவிதை போன்ற இலக்கிய வடிவங்களின் மூலம் வெளிக்கொண்டுவந்து பிரச்சனைகளுக்கான தீர்வையும் தேடுகின்றவர்களாக விளங்குகின்றார்கள். இந்த வகையில் இலக்கியவாதிகள் கூட ஒரு சமூக வைத்தியர்கள் என்ற முடிவிற்கு நாம் வரலாம்
இவ்வாறு கடந்த 14-09-2024 சனிக்கிழமையன்று மாலை கனடா மார்க்கம் நகரில் உள்ள அரச சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் முன்னாள் அரசாங்க அதிபரும் கவிஞர் ‘ஆரணி’ என்னும் புனைபெயரைக் கொண்டவருமான அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் ‘நினைவிடைத்தோய்தல்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி புகழாரம் சூட்டினார்.
பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான ஆர். என் லோகேந்திரலிங்கம் வரவேற்புரையையும் அறிமுக உரையையும், கவிஞர் அகணி சுரேஸ் அவர்கள் வெளியீட்டு உரையையும் முனைவர் வாசுகி நகுலராஜா அவர்கள் ஆய்வுரையையும் டாக்டர் போல் ஜோசப் அவர்கள் நயப்புரையையும் ஆற்றினார்கள். மேலும் திருவாளர்கள் கிருஸ்ணபிள்ளை திருவருள். சிவன் இளங்கோ. க. ரவீந்திரநாதன். சி இளஞ்செழியன். குருசாமி சுப்பிரமணியம், தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினார்கள்.
விழா நிகழ்ச்சிகளை திருமதி ஜோதி ஜெயக்குமார் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் த னது உரையில் பின்வருமாறு தெரிவித்தார்.
கலை இலக்கியவாதிகளின் பங்களிப்புக்கள் எமது தமிழ் இனத்திற்கு தற்காலத்தில் மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன. பல வகையான அடக்குமுறைகளினால் நொந்து போயுள்ள எம் இனத்தின் அவலங்களையும் தேவைகளையும் அவற்றிக்கான தீர்வையும் தீர்க்க தரிசனத்துடன் படைக்க வேண்டிய பொறுப்பு எம் மத்தியில் வாழும் படைப்பாளிக்களுக்கும் கவிஞர்களுக்கும் உள்ளது. அவர்களின் எமது தாயகக் கவிஞர் ஆரணி அவர்கள் தான் வாழும் சமூகத்தினதும் இனத்தினதும் அவலங்களை நல்ல கலையம்சங்களோடு கவிதைகளாக வடித்து அங்கிருந்து நூல்களை இங்கு கொண்டுவந்துள்ளார். அவருக்கு நாம் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும்” என்றார்.
அங்கு தலைமையுரையாற்றிய பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் தனது உரையில் ” எம் மத்தியில் வெளிவருகின்ற இலக்கியப் படைப்புக்களை நாம் தற்காலத்தில் மூன்று தளங்களில் வைத்து பார்க்க வேண்டும். தாயகம்- தமிழகம்- மற்றும் புலம் பெயர் தேசம் ஆகிய மூன்றுதளங்களில் எமது படைப்புக்கள் பார்வைக்கும் விமர்சனத்திற்குமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் எமது இன்றைய நூலாசிரியர் தாயகக் கவிஞர் ஆரணி அவர்கள் தனது கவிதை நூலை தாயகத்தில் வெளியிட்டு வைத்து விட்டு தற்போது நாம் வாழுகின்ற புலம் பெயர் தேசமான கனடாவிற்கு கொண்டு வந்துள்ளார். அவர் ஒரு சரியான இடத்திற்கே கொண்டு வந்துள்ளார் என்றே நாம் கருதுகின்றேன். காரணம் கனடாவில் நாம் பல இலக்கிய அமைப்புக்களை நடத்தி வருகின்றோம்.இங்கு நூற்றுக்கு மேற்பட்ட கவிஞர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். கனடாவில் உள்ள கவிஞர்கள் மற்றும் கவிதைச் சுவைஞர்கள் மத்தியில் இந்த நூல்வெளியிடப்படுகின்றது பெருமைக்குரியதும் உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறக்கூடியதுமாகிய ஒரு விடயமாகும். எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கவிதை நூலின் ஆக்ககர்த்தா அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை பாராட்டுவோம் கொண்டாடுவோம்” என்றார்
மேற்படி வெளியீட்டு விழாவில் சுருவில் சரவணை மற்றும் தீவகம் ஆகிய இடங்களைச் சேர்ந்த நண்பர்கள் உறவினர்கள் மற்றும் இலக்கியவாதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.அவர்கள் அனைவரும் நூலின் பிரதிகளை அன்பளிப்புக்களை வழங்கி நூலாசிரியரிடமிருந்து பெற்றுச் சென்றார்கள்.
இறுதியில் பதிலுரையாற்றிய நூலாசிரியர் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உரையாற்றினார். தனது எழுத்துக்களுக்கும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து இந்த விழாவை ஏற்பாடு செய்த விழாக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து தனது படைப்புக்கள் பற்றிய திறந்த விமர்சனங்களை வழங்கிய அனைத்து உரையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். சுருவில் மற்றும் சரவணை மக்கள் ஒன்றியங்கள் சார்பில் பாராட்டுக் கேடயங்கள் கவிஞர் ஆரணி அவர்களுக்கு வழங்கப்பெற்றன.
சத்தியன்