வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சங்குச் சின்னத்திற்கு வழங்கும் வாக்குகள் தெற்கின் முகத்தில் அறையைக் கூடியதாக இருக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
17-09-2024 அன்று செவ்வாய்க்கிழமை மூளாய் – வேரம் பகுதியில் இடம்பெற்ற தமிழ் பொதுவேட்பாளர் ஆதரவுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள வேட்பாளர்கள் பணத்தை வழங்கினால் வெற்றிபெறலாம் நினைக்கிறார்கள் அவர்களுக்கு தரகர்களாக தமிழ் அரசியல் வாதிகள் செயற்படுகின்றனர்.
நாட்டின் புரையோடியுள்ள இனப் பிரச்சினை முதல் தமிழ் மக்கள் எதிர்நோக்கம் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தமிழர்களின் இனப்பெரும்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட நகர்வுகள் வேகமாக இடம்பெற்று வருகின்றது.
அது மட்டுமல்லாது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகள் இன்னமும் தீர்வு இன்றி நீண்டு கொண்டே செல்கின்ற நிலையில் தேர்தல் வழங்கும் வாக்குறுதிகள் அதிகாரத்துக்கு வந்த பின்னர் மறையும் நிலை காணப்படுகிறது.
இதனால் தான் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தவும் இம்முறை தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற நகர்களுக்கு அவசியம் ஏற்பட்டது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலாக தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தவே பொது வேட்பாளர் உருவாக்கப்பட்டது.
பொது வேட்பாளர் என்ற விடயத்தில் கட்சி அரசியல் முதன்மை படுத்தப்படவில்லை. தமிழ் தேசியத்தை முன் நிலைப்படுத்தி வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான விடிவை எதிர்நோக்கிய ஒரு குறியீடாகவே தமிழ் பொது வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை தெற்கு
தொடர்ச்சியாக மறுதலித்து வருகிறது.
பொது வேட்பாளர் என்ற விடயத்தை பலர் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் சிறு குழு ஒன்று குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொது வேட்பாளர் என்ற நகர்வை எதிர்க்கின்றது.
தெற்கு அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இதயசுத்தியுடன் அணுகவில்லை தங்கள் தேர்தல் அறிக்கையில் வெறும் எழுத்துக்களாக வைத்துள்ளனர்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவோ அவர்கள் ஆக்கபூர்வமான எவற்றையும் குறிப்பிடாத நிலையில் எவ்விதமான எழுத்து மூலமாக உறுதிமொழிகளையும் வழங்க அவர்கள் தயாராக இல்லை.
தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தாருங்கள் என எம்மில் சிலர் பணத்தைப் பெற்றுவிட்டு மக்களிட்ம் கெஞ்சுகிறார்கள் என்ன அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பது.
தமிழ் பொது வேட்பாளர் என்பது தெற்குடன் மேற்கொள்ளப்பட்ட டீல் எனக் கூறுபவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழ் தேசியத்தின் வழியில் தமிழ் மக்களின் நலனை நோக்கிய பயணம்.
தமிழ் மக்களின் குரலாக எமது அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்வு வழங்கினால் மட்டுமே தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதை தெற்கின் முகத்தில் அறைந்து கூறக்கூடிய காலம் கனிந்திருக்கின்றது
இன்னும் சில தினங்களில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் பொது வேட்பாளருக்கு வாக்குகளை வழங்கி அதை செயல்படுத்தி காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
ஆகவே நீங்கள் அனைவரும் பொது வேட்பாளருக்கு ஆதரவு பொது வேட்பாளரை வெல்ல வைப்பதன் மூலம் நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.