ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் சன்மானம் என்று சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் கூறியதையடுத்து, ராகுல் காந்தியின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜக தலைவர் ஒருவர், ராகுல் காந்தியின் பாட்டிக்கு நேர்ந்த கதியைச் சந்திக்க நேரிடும் என்றும், நாக்கை அறுப்பதாக ஷிண்டே சேனா சட்டமன்ற உறுப்பினர் பேசியது தொடர்பாக ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சகோதரர் ராகுல் காந்தியின் புகழும், மக்கள் ஆதரவும் பெருகிவருவது இது போன்ற மோசமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுக்கிறது. எனவே எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும். மேலும் இது போன்ற மிரட்டல் மற்றும் வன்முறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.