ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பரபரப்புகளுக்குள் அமுங்கிப் போன ஒரு விடயம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆகும். இப்பொழுது ஒரு ஜெனிவா கூட்டத் தொடர் போய்க் கொண்டிருக்கின்றது. இக்கூட்டத் தொடரில் கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிட்ட அறிக்கையானது, இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை உருவாக்கக்கூடியது என்று அவதானிக்கப்படுகின்றது. பொறுப்புக்கூறல் தொடர்பில் போர் குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இயங்குவதற்கு அனுமதி கோரப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உண்டு அல்லது அரசாங்கத்திற்கு எதிராக மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்ற ஊகமும் உண்டு.
ஜெனிவாவில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதி மனித உரிமைகள் ஆணையருடைய நிலைப்பாட்டை சிறீலங்கா ஏறுகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அரசாங்கம் தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. இப்பொழுது கேள்வி என்னவென்றால், இந்த விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவராகிய சஜித் பிரேமதாசவும் மாற்றத்தை கொண்டுவரப் போவதாகக் கூறும் மற்றொரு வேட்பாளராகிய அனுரவும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதுதான்.
அரசாங்கம் வழமைபோல ஐநா மனித உரிமைகள் ஆணையருடைய அறிக்கையை எதிர்க்கிறது. ஆனால் மாற்றத்தை கொண்டு வரப் போவதாகக் கூறும் அனுர இந்த விடயத்தில் என்ன மாற்றத்தை தமிழ் மக்களுக்குக் காட்டப் போகிறார்?
பொறுப்புக்கூறல் தொடர்பாக அவர் இதுவரையிலும் பொறுப்பான பதில் எதையும் கூறியிருக்கவில்லை. அசோஸியேற்றற் பிரஸ் ஊடகத்துக்கு வழங்கிய பதிலில்… “பொறுப்புக்கூறல் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், இது பழிவாங்கும் வழியில் அல்ல, யாரையும் குற்றஞ்சாட்டுவது அல்ல, உண்மையை வெளிப்படுத்துவதுதான் தான்” என்று கூறியுள்ள அனுர, “பாதிக்கப்பட்டவர்கள் கூட யாரையும் தண்டிக்க விரும்பவில்லை. அவர்கள் என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறார்கள்.” என்றும் கூறியுள்ளார். அதாவது தமிழ் மக்கள் நீதியை கேட்கவில்லை என்று அனுர கூறுகிறார்.
அடுத்தவர் சஜித் பிரேமதாச. அவருக்குத்தான் சுமந்திரன் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தலைகீழாக நிற்கிறார். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற விரும்பும் சஜித் பிரேமதாக, ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் நிலைப்பாடு தொடர்பாக தனது நிலைப்பாட்டை இதுவரை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதற்கு முன்னரும் அவர் பொறுப்பு கூறல் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்திருக்கவில்லை.
பொறுப்புக்கூறல் என்பது இறந்த காலத்துக்கு பொறுப்பு கூறுவது. இறந்த காலத்தில் போர்க்களத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கும் கொடுமைகளுக்கும் பொறுப்புக் கூறுவது. இறந்த காலத்துக்கு பொறுப்புக் கூறத் தயாராக இல்லாத ஒரு சிங்கள தலைவர் நிகழ்காலத்துக்கும் வருங்காலத்துக்கும் தமிழர்களுக்கு பொறுப்பு கூறுவார் என்று எப்படி எதிர்பார்ப்பது? அப்படிப்பட்ட ஒரு தலைவர் தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தருவார் என்று சுமந்திரன் நம்புகின்றாரா?இது தேர்தல் காலம்.தமிழ் வாக்குகளை எதிர் பார்க்கும் சஜித் இது விடயத்தில் தமிழர்களுக்கு பொறுப்புக்கு கூறத் தயாரா?
கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ஒரு பெரிய கூட்டம் இடம்பெற்றது. இதில் சுமந்திரன் சி வி கே சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.சிவிகே சிவஞானம் சஜித்தை ஆதரிக்கும் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட போதிலும், பிரச்சார மேடைகளில் சஜித்துக்கு ஆதரவாகத் தான் பேசப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் சுமந்திரன் சி வி கே சிவஞானத்தை எதையோ கூறி நம்பச் செய்து தன்னோடு சேர்த்து மேடைக்கு அழைத்து வந்து விட்டார். மேடையில் அவர் பொது வேட்பாளருக்கு எதிராக ஆக்ரோஷமாக உரையாற்றினார். சஜித்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு காரணத்தையும் சொன்னார்.நாங்கள் இலங்கைக்குள் இணைந்து வாழ விரும்புகிறோம் என்பதுதான் அவருடைய பேச்சின் சாரம். அவ்வாறு பேசிய பின் அவர் தமது விசுவாசிகளால் வெளியிடப்படும் ஒரு பத்திரிகையையும் சஜித்திடம் கையளித்தார். அந்த பத்திரிகைக்கு பெயர் “சுமந்திரம்” என்பதாகும்.
தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகைக்கு பெயர் சுதந்திரன். இப்பொழுது சுமந்திரன் தன்னுடைய பெயரில் ஒரு பத்திரிகையை வெளியிடுகிறார். சுதந்திரன் சுமந்திரம் ஆனது போல தமிழரசுக் கட்சியின் சமஸ்டி கோரிக்கையும் 13க்குள் சுருக்கப்பட்டு விட்டதா?
சஜித் பிரேமதாச 13ஐ முழுமையாக நிறைவேற்றுவேன் என்ற ஒரு வாக்குறுதியை மட்டும்தான் வழங்கி வருகிறார். அதை நம்பி அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சுமந்திரன் கேட்கிறார்.
தமிழரசுக் கட்சிக்கு மற்றொரு பெயர் சமஸ்டிக் கட்சி என்பதாகும். சமஸ்டிக் கட்சி எப்பொழுது சமஸ்ரியை கைவிட்டது? அதற்கு சுமந்திரன் தமிழ் மக்களுக்கு விளக்கம் கூற வேண்டும்.
அதோடு ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அகப் பிந்திய அறிக்கைக்குப் பதில் கூற வேண்டும். அந்த அறிக்கை தொடர்பான சஜித்தின் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு அவர் தெரிவிக்க வேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளாக இன அழிப்பு,போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறத் தயாராக இருக்காத சஜித் பிரேமதாச, அதிலும் குறிப்பாக ஒரு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில்,தமிழ் மக்களின் ஆதரவை எதிர்பார்த்து இருக்கும் ஒரு காலகட்டத்தில் கூட, பொறுப்புக்கூறல் தொடர்பாக தமிழ் மக்களுக்குச் சாதகமான ஒரு முடிவை எடுக்கத் தயாரற்ற சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுமந்திரன் எந்த முகத்தோடு தமிழ் மக்களைப் பார்த்துக் கேட்கின்றார் ?
ஏற்கனவே 2015 இல் இருந்து 18 வரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் மைத்திரி அரசாங்கத்தை ஆதரித்ததன் விளைவாக ஆறு ஆசனங்களை இழந்தது. அதிலிருந்து சுமந்திரன் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. இப்பொழுது பொது வேட்பாளரும் வந்து விட்டார். ஒரு தமிழ் வேட்பாளருக்கு எதிராக கடுமையான சொற்களைப் பயன்படுத்தும் சுமந்திரன், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு குற்றங்களுக்கு எதிராக பொறுப்புக் கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசாவை ஆதரிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பதன்மூலம் முடிவில் தானும் தோற்று சஜித்தையும் தோற்கடித்து தமிழ் மக்களையும் தோற்கடிக்க விரும்புகின்றாரா?
அவர் வேண்டுமானால் தோற்கட்டும். அவரை நம்பி தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும் சஜித் வேண்டுமானால் தோற்கட்டும். ஆனால் தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை. தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு மக்கள் என்பதனால்தான், மீண்டும் மீண்டும் எழுகிறார்கள். இப்பொழுது ஜனநாயக வழிமுறை ஒன்றுக்கூடாக அவர்கள் மீண்டும் எழு முயற்சிக்கிறார்கள். அதுதான் பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற நகர்வு ஆகும்.அதன் மூலம் தமிழ் மக்கள் தாங்கள் யார் என்பதனை சுமந்திரனுக்கு நிரூபிக்க வேண்டும். தவறின், இன அழிப்புக்கு எதிராக சிங்கள தலைவர்கள் பொறுப்புக்கூறத் தேவையில்லை என்று சுமந்திரன் கூறுவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டதாக எடுத்துக்கொள்ளப்படும்.