சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு 19-09-2024 அன்று தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் , வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு அன்று காலை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற ஆளுநர் அவர்கள், படகை பார்வையிட்டார். இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபா செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது
தமது தீவில் நீண்டகாலமாக காணப்பட்ட போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில், ஆளுநர் அவர்களுக்கு நெடுந்தீவு மக்கள் நன்றியை தெரிவித்தனர். ஆளுநர் அவர்களின் கடும் முயற்சியின் பயனாக நெடுந்தாரகை மீண்டும் தமது சேவையை ஆரம்பிப்பதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.
நெடுந்தாரகை பயணிகள் படகின் திருத்தப் பணிகளுக்காக துரித நடவடிக்கையை மேற்கொண்ட மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும், துறைசார் அமைச்சுக்கும் இதன்போது ஆளுநர் அவர்கள் நன்றியை தெரிவித்தார். தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்,
பயணிகள் சேவையை ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு தினமும் நெடுந்தீவில் இருந்து ஒரு தடவை குறிகட்டுவான் இறங்குத்துறைக்கு பயணிக்க உள்ளது. நெடுந்தாரகை படகில் ஒரு தடவையில் 80 பேர் பயணிக்க முடியும்.