(எஸ்.ஆர்.ராஜா)
இலங்கையில் தற்போது நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது காணப்பட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் சஜித் பிரேமதாஸா, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திஸநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களின் முக்கியமாக முதல் மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலை ஒன்று காணப்படுகின்றது.
இவர்களின் சஜித் பிரேமதாஸா இலங்கையில் பெரும்பாலான சிறுபாண்மைக் கட்சிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுகின்றார். அத்துடன் இவர் தனது ஆட்சியின் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கருத்தினை முன்வைத்துள்ளார்.
அதேபோல் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மஹிந்த ராஜபக்ஸ அணியில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்ற பெரும்பாண்மையான பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு போட்டியிடுகின்றார். இவர் பொதுவாக கட்சிகளை உடைப்பதில் வல்லவர் அந்தவகையில் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் தனது பக்கம் ஈர்த்துள்ளார்.
இவர் கடந்த ஆட்சிக்காளத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தி வரிசை யுகம் தோன்றாமல் இருக்க வேண்டுமாயின் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டு வருகின்றார்.
அநுரகுமார திஸாநாயக்க இவர் தனது சிறந்த Nபுச்சாற்றல் மற்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கும் போது அவற்றை புள்ளிவிபரங்களுடன் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட வேட்பாளராவார். இவர் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் தற்போது பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் கொள்ளைக்காரர் என்றும் தான் ஆட்சிக்கு வந்ததும் கொள்ளைக் காரர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளார்.
தற்போது கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்குள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள 19 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் பெரும்பாலும் இவரின் பேச்சாற்றல் மற்றும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களால் கவர்ந்திழுக்கப்பட்டு இவருக்கு வாக்களிப்பதன் மூலம் இதுவரை காலமும் அரசியல் வாதிகள் செய்து வந்த அனைத்து பித்தலாட்டங்களும் முடிவுக்கு வரும் என்ற கோணத்தில் கருத்துக்களை முன்வைத்து அவருக்கு சார்பாக செயற்படும் எண்ணத்திலும் உள்ளார்கள்.
இவை அனைத்தும் தென்னிலங்கையில் காணப்படும் நிலை ஆகும். அவர்களின் ஒரு சில வேட்பாளர்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவினைப் பெற்றுக் கொடுப்பதில் சிலர் முன்னின்று செயற்பட்டு வருகின்றனர்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார் அவருக்கு தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிப்பதன் மூலம் நாம் சிங்கள ஜனாதிபதிகள் மீதான அதிருப்தியை வெளிக்காட்டுவதுடன் சர்வதே சமூகத்திற்கு எமது கொள்கை தொடர்பில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கின்றார்கள் என்றும் எமக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் தமிழ்ப்பொது வேட்பாளர் ஆரம்பத்தில் பல தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியிருந்தன. இதில் பொதுவாக வடகிழக்கில் இயங்கும் தமிழ்க் கட்சிகளின் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. மற்றும் அங்கஜன் இராமநாதன், மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் தரப்பினர் ரணில் விக்கிரமசிங்காவினை ஆதரித்து வருகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி இத் தேர்தலினை தமிழ் சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்றே குறிப்பிட்டது. தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களில் சிலர் தவிர்ந்த ஏனைய அனைவரும் தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியனேந்திரன் அவர்களையே ஆதரிக்கும் முடிவினை எடுத்ததுடன், ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் வேறு கட்சிகளுடன் சேர்ந்து தற்போது புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது கடந்த வருடம் உள்ளுராட்சி தேர்தலை நடத்த உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிவிப்பினை அடுத்து தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக வெளியான அறிவிப்பினை தொடர்ந்து உருவாக்கப்பட்டதே புதிய கூட்டமைப்பாகும். இதன் உருவாக்கத்திற்கு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவுக்கும் வித்திட்டவர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களே என அப்போது குற்றம் சுமத்தப்பட்டது.
பொதுவேட்பாளரை ஆதரிக்கும் முடிவினையே தமிழரசுக் கட்சியும் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போது திடீரென வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் உயர்பீடம் கூடி சஜித் பிரேமதாஸாவினை ஆதரிக்கும் முடிவினை அறிவித்தனர். அறிவிப்பு வெளியானதும் பலர் தாம் அத்தகைய முடிவில் உடன்படவில்லை என்றும் இது தனிநபர் முடிவு என்றும் குறிப்பிட்ட அறிக்கைகளை வெளியிட மேலும் சிலர் தாம் கூட்டத்தில் கலந்து கொள்ளாத சந்தர்ப்பத்தில் இது எடுக்கப்பட்டதாகவும் சிலர் தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்து வந்தனர்.
எனினும் பின்னர் மீண்டும் கூடிய தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் சஜித் பிரேமதாஸாவினை ஆதரிப்பதாக அறிவிப்பு வெளியான போதிலும் ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் பொது வேட்பாளரையே ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். இதற்கு மேலும் ஒருபடி காலையில் ஒருவரையும் பின்னர் மாலையில் பிறிதொருவரையும் ஆதரிப்பதாக அறிவிக்கின்றனர். இந்தவகையில் தமிழரசுக் கட்சியின் கொள்கையில் உறுதிப்பாடு இல்லையா அல்லது தமிழரசுக் கட்சியின் கட்டுக்கோப்பானது தற்போது சிதைந்து விட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு சில அரசியல் வாதிகள் தமது சுயஇலாப அரசியலுக்காக தென்னிலங்கை அரசியல் தலைவர்களையே ஆதரிக்க வேண்டும் என்றும் பொது வேட்பாளரை ஆதரிப்பதானது சிங்கள மக்களை எதிரான கோணத்தில் சிந்திக்கத் தோன்றும் என்றும் பொதுவேட்பாளரால் வெற்றி பெற முடியாது என தெரிந்தும் போட்டியிடுவது முட்டாள்தனமான முடிவு எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் ஆதரவு நிலைப்பாடு என்பது முற்றுப்பெறாத விமர்சனங்களை எழுப்பி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த முதலாம் கடந்த திகதி சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்த நாள் முதல் இன்று வரை கட்சி மீதான விமர்சனங்கள் மேலோங்கி வருகின்றன.
இதேவேளை, சஜித்தை ஆதரிப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தரப்பு அறிவித்த போதிலும் பின்னர் மாலையில் அவர்கள் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இவ்வாறு தமிழரசுக் கட்சியில் இரண்டு பிரிவுகள் காணப்பட்ட நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனின் வீட்டிற்கு சென்றுள்ளார். இது வடக்கு – கிழக்கில் அதிக தொகையான வாக்காளர்களை கொண்ட வன்னி மாவட்டத்தின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் நிர்மலநாதனை ஜனாதிபதி சந்தித்தபோது, அங்கு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்துள்ளனர். இந்த சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை ஆதரவாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்கள் இறுதிநாள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கொழும்பிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இக்கருத்தை வெளியிட்டார்.
இதன் மூலம் தற்போது தமிழரசுக் கட்சி 3 துண்டகளாக பிளவுபட்டுள்ளதாக தெரிகின்றது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் கூட்டமைப்பாக காணப்பட்ட கட்சிகள் பிளவுபட்ட இன்று தனிக் கட்சியான தமிழரசுக் கட்சி கூட துண்டாடப்படும் நிலைக்கு வந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக செயற்படவேண்டும் என்பதே எமது விருப்பம் என்றும், ஆனால் இனி அது கனவாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
‘தமிழரசுக் கட்சி கட்டுக்கோப்பான கட்சி. அதை யாரும் மாற்ற முடியாது. தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைப்பார்கள். அதனை கட்சி கூடி பேசி முடிவை அறிவிக்கும். அது கட்சியின் முடிவு. அதில் உடன்பாடு இல்லாத தனிநபர்கள் சில முடிவுகளை எடுக்கும் நிலை உருவாகிறது.
அவ்வாறே இந்த தேர்தல் நேரத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு கொள்கை இருக்கிறது. அது நிலையாக இருக்கும். கட்சி ரீதியில் சுமந்திரன் மீதும் தவறு இருக்கும். ஏனையவர்கள் மீதும் தவறு இருக்கும் அது பேசிக்கொள்ளலாம்.
கட்சி நிலையாக இருக்கும். கருத்துச் சொல்வதற்கு சுதந்திரம் இருக்கு. அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.’ என்றார்.
எது எவ்வாறான போதிலும் காலத்திற்கு காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கோணங்களில் செயற்பட்டு வருகின்றமை உண்மையே. எனினும் எதிர்வரும் காலங்களில் கூட்டமைப்பை ஒழுங்குபடுத்தவேண்டும்
தற்போது பல்வேறு கூத்தாட்டிகளும் கூட்டமைப்பை தமது தாளத்திற்கு ஆட்சி வருகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் அனைத்துத் தரப்பினரும் இணைந்து (புலம் பெயர் தமிழர்கள் உட்பட) ஒரு உறுதியான நிலைப்பாட்டை உருவாக்கி வலுவான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முன்வரவேண்டும். அவ்வாறு செயற்படாத சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் இருப்புக்கள் கூடக் கேள்விக்குறியாக்கப்படும் நிலை உருவாகக் கூடும். தற்போது இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவிலும் அது தங்கியுள்ளது.
தென்னிலங்கை மக்கள் அனைவரும் தற்போது மாற்றம் ஒன்று அவசியம் என்ற அடிப்படையில் புதிய தலைமைத்துவம் புதிய அரசியல் வாதிகள் புதிய எண்ணம் கொண்ட நபர்களை தேடி தமது வாக்குகளை பயன்படுத்தும் நோக்கில் உள்ளமை அண்மைக் காலங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் மூலம் காணக் கூடியதாக உள்ளது. அவ்வாறான ஒரு தென்னிலங்கையில் ஏற்படுமாயின் எதிர்கால அரசியலில் பல மாற்றங்கள் இடம்பெறும். அதேபோல். தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பிலும் இளம் இரத்தம் – புதிய தலைமுறை – புதிய நோக்க கொண்ட நபர்களின் தேவையினை தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் காலம் வெகு விரைவில் உருவாகலாம்.