பு.கஜிந்தன்
வடக்கு மாகாணத்தில் சன் பவர் குழுமத்தினால் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 32 ஆயிரம் வீடுகளுக்கான நிதி மூலத்திற்குரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட வங்கி ஒன்றின் ஊடாக இந்த திட்டத்திற்கான நிதி வழங்கப்படவுள்ளது. தலா 50 இலட்சம் ரூபா செலவில் முற்றுமுழுதாக இலவசமாக பயனாளர்களுக்கு இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.
வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள சன் பவர் குழுமத்தினால் சுமார் நான்காயிரம் ஏக்கர் காணியில் சூரிய மின்கல பூங்கா (Solar Park) நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான முழுமையான காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கடன் விடுவிப்பு தொடர்பான சான்றுபடுத்தல் பெறப்படவுள்ளது. இந்த இரண்டு செயற்பாடுகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலவச வீட்டு திட்டத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தலா ஐம்பது இலட்சம் ரூபா செலவில் 32 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. வீட்டு நிர்மாணப்பணிகள் அனைத்தும் சன் பவர் குழுமத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளன. வீடு முழுமையாக நிர்மாணிக்கப்பட்டதன பின்னரே பயனாளர்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்குரிய முன்மொழிவிற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.