நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களிலும், அதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம், உள்ளிட்ட இடங்களிலும் திடீரென நில அதிர்வை உணர்ந்ததால் பொதுமக்கள் பீதியில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். வீடுகள் பயங்கர சப்தத்துடன் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். சரியாக 12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, “நில அதிர்வு உள்ளிட்ட சம்பவங்கள் இருந்தால் நில நடுக்க ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடும். இதுவரை அதிகாரப்பூர்வ நில அதிர்வு குறித்து தகவல் கிடைக்கப்பெறவில்லை. தகவல் குறித்து விசாரித்து வருகிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பல கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.