காவலரை நோக்கி சுட முயன்ற போது சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்து வந்த நிலையில், நீலாங்கரையில் வைத்து காவலரை தாக்கி விட்டு சீசிங் ராஜா தப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில், தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவல் ஆய்வாளர் இளங்கனியை நோக்கி சீசிங் ராஜா துப்பாக்கியால் சுட்டபோது, காவல் ஆய்வாளர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி இருக்கிறார். அவரது கார் மற்றும் கண்ணாடி ஆகிய இடங்களில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. மற்றொரு காவல் அதிகாரி பாதுகாப்பு நடவடிக்கையாக சுட்ட போது சீசிங் ராஜா உயிரிழந்தார். என்கவுன்ட்டர் நடத்தப்பட்டவுடன் அவசர ஊர்தி மூலமாக சீசிங் ராஜா மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, அவர் மரணம் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.