போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 87) முதுமை தொடர்பான உடல்நல பிரச்சினையால் சமீபகாலமாக அவதிப்பட்டு வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவர் இந்தோனேசியா, பப்புவா நியூ கினி உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து பெல்ஜியம், லக்சம்பர்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். இந்தநிலையில் போப் பிரான்சிசுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுடனான சந்திப்பை அவர் ரத்து செய்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “லேசான காய்ச்சல் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வரும் நாட்களில் பயணம் காரணமாகவும், இன்று திட்டமிடப்பட்ட பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.