50 வருடங்களுக்கு முன்னர் நாம் வாசித்த கவிதையொன்று…
”சுரண்டப்பட்டு வாழ்ந்த நான்
ஒருநாள் வெகுண்டெழுந்தேன்..
அன்று முதல்
நான் ஒரு கொம்யுனிஸ்ட் ஆனேன்”
இந்தக் கவிதை ஈழத்தமிழர்களான எமக்கும் பொருந்தும். இந்தக் கவிதையில் உள்ள ‘சுரண்டப்பட்டு’
என்பதை ‘அடக்கப்பட்டு’ என்று மாற்றினால் நாமும் கம்யுனிஸ்ட் ஆக ஒரு மாற்றத்தை எம்மிடத்தில் காண்பதில் தவறேதும் இல்லை.
இலங்கையில் முதற் தடவையாக ஒரு கம்யுனிஸ்ட் நாட்டின் அதிபராகி உள்ளார்.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் சிறந்த கல்லூரிகளில் சிறந்த ஆசிரியர்கள் கம்யுனிஸ்ட் ஆக இருந்தார்கள்.
உரும்பிராய் இந்துக் கல்லூரியில் வைத்திலிங்கம் அவர்கள். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கார்த்திகேசு அவர்கள். முள்ளியவளையில் வி. பொன்னம்பலம் அவர்கள். ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் ‘ஒறேற்றர்’ சுப்பிரமணியம் அவர்கள். அவர்கள் தங்கள் மாணவர்களில் பலருக்கு கொம்யுனிய சிந்தனைகளைப் போதித்து அவர்களை நெறிப்படுத்தினார்.
எமது அரசியல் தலைவர்களான அமிர்தலிங்கம். தர்மலிங்கம். ஆலாலசுந்தரம் உட்பட பலர் கம்யுனிச சிந்தனைகளை ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால் பாராளுமன்றம் செல்வதற்காக அதிலிருந்து விலகி நின்று தமிழ்த் தேசியத்தை கையில் எடுததார்கள்.
தமிழ்த் தேசியம் பேசுவது கம்யுனிசத்திற்கு விரோதமானது அல்ல. ஆனால் சர்வதேசியம் என்ற பிரிவு தான் கம்யுனிசத்திற்குள் அடக்கமாகியுள்ளது.
இலங்கையின் புதிய அதிபர் அநுர தனது பதவியை ஏற்றுக்கொண்டு கையெழுத்திடுகின்றார். அவர் இலங்கையில் நேர்மையான அரசியல் தலைமையை கையில் எடுக்கின்றார் என நாம் நம்பிக்கை வைப்போம்.
கால மாற்றங்கள் நம் தமிழர்களுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் நன்மை விளைவிப்பதாக இருந்தால் அனைவரும் தேசத்தையும் அதன் அதிபரையும் கொண்டாடி மகிழலாம்.
அது வரை இத்தனை ஆண்டுகளை கடும் துன்பியல் அனுபவங்களாக பொறுத்து கொண்ட நாம் இன்னும் சில வருடங்களை புதிய ஜனாதிபதியிடமும் அவரது அரசிடமும் கையளித்து காத்திருப்போம்.