மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 24 வயது பெண் ஒருவர் வீட்டில் கருக்கலைப்பு செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை காவல்துறை கைது செய்துள்ள நிலையில், இறந்தவரின் மாமியார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த பெண் வீட்டில் ரகசியமாக கருக்கலைப்பு செய்து கொண்டது இதுவரை நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
கருக்கலைப்பு செய்த சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்து இறந்தார். கருக்கலைப்பு செய்ய தனியார் மருத்துவரிடமும் காவல்துறை விசாரணை நடத்த உள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கருவில் இருப்பது பெண் குழந்தை என குடும்பத்தினர் அறிந்ததும் வீட்டில் கருக்கலைப்பு செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றனர். “ஞாயிற்றுக்கிழமை அதிக ரத்தப்போக்கு காரணமாக அந்த பெண்ணின் நிலை மோசமடைந்தது. மறுநாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் வழியில் இறந்தார்” என்று இந்தாபூர் காவல்துறை தெரிவித்தனர். மேலும், 4 மாத கருவை வீடு அருகே புதைத்தது விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.