கதிரோட்டம்- 27-09-2024 வெள்ளிக்கிழமை
ஒரு முதலாளித்து ஆட்சி முறையில், ஆட்சியாளர்களின் பலமானது வெறுமனே அதிகாரங்கள் மாத்திரமல்ல. அவர்கள் பண பலத்தை அனுபவிக்கின்றார்கள். அதிகார பலத்தை நுகர்ந்து கொள்கின்றார். அரச வளங்களை தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினரும் அதற்கும் அப்பால் தங்கள் உறவினர் நண்பர்கள் என அனைத்த தரப்பினருக்கும் பங்கு போட்டுக் கொண்டுள்ளார்கள்.
இந்த விடயத்தை நாம் எமது கதிரோட்டப் பக்கத்தில் கடந்த காலங்களில் தொடச்சியாக எழுதி அழுத்தமாக எழுதி வந்துள்ளோம். தங்கள் அதிகாரங்களுக்கு ஏற்ப சலுகைகளை அதிகளவு அபகரித்து வைத்துக்கொண்டார்கள். அவற்றை விட மக்களைக் காப்பாற்றுவதற்காகவும் அவர்களுக்கு துணையாக இருப்பதற்காகவும் நாட்டைக் காப்பாற்றுவதற்காகவும் ஏற்படுததப்பட்ட படைத்தரப்பு பிரிவுகளை தங்கள் பாதுகாப்பிற்காக அதிகளவு பயன்படுத்தி வந்துள்ளார்கள் இலங்கை அரசியல்வாதிகள். முன்னாள் பிரதமர்கள். முன்னாள் -ஜனாதிபதிகள் அதற்கு முன்பிருந்த தலைவர்கள் உட்பட அனைவரினதும் மாளிகைகளில் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த சிங்களச் சிப்பாய்கள் ‘காவல் நாய்களாக’ அடைப்பட்டுக் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றார்கள். யாரிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்த படைத்தரப்பினர் அமர்த்தப்படுகின்றார்கள் என்பதைக் கூட தங்கள் கேள்விகளாக எழுப்ப மக்களோ அன்றி எதிர்க்கட்சிகளோ முன்வந்ததில்லை. ஏனென்றால் அவர்கள் ஆட்சிக்காலத்தில் கூட அதே சுகபோகங்களை அந்த அரசியல்வாதிகள் அனுபவித்து மகிழ்ந்தவர்களாக இருந்திருப்பார்கள்.
உதாரணமாக இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய எமது தமிழ் அரசியல்வாதியான சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த பின்னரும் கூட முன்னர் அனுபவித்த சலுகைகள் அனைத்தையும் உயிர் துறக்கும் வரை அனுபவித்தே வந்துள்ளார். அவ்வாறான சலுகைகளை அவருக்கு வழங்கிய மகிந்தாவும் பின்னர் வந்த கோட்டாபாவும் தொடர்ந்து மக்கள் ஆதரவு இல்லாமலேயே ஜனாதிபதியான ரணில் என்பவர் கூட அனைத்து சலுகைளையும் சம்பந்தர் அவர்களுக்கு வழங்கி வைத்தார். ஆனால் அந்த தமிழ்த் தலைவரின் பதவியினால் தமிழ் மக்கள் எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை. மாறாக சம்பந்தர் அவர்களிடம் உதவி கேட்டுச் சென்ற முன்னாள் போராளிகள் கூட அவரால் அவமானப்படுத்தப்பட்டார்கள், நிராகரிக்கப்பட்டார்கள்.
அப்படியானால் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த முதலாளித்துவப் போக்கு கொண்டு சிங்களத் தலைவர்கள் எந்தெந்த சுக போகங்களை அனுபவித்திருப்பார்கள் என்று அறிந்து கொள்ள முயன்றிருக்க வேண்டும்.
இந்த விடயங்களையும் அதன் உள்விவகாரங்களையும் நாம் இவ்வாரத்தின் கதிரோட்டம் பகுதியில் எடுத்துக்கொண்டதற்கு காரணம். தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் அநுர குமாரவின் அரசின் ஊடாக பல மாற்றங்கள் நிலவும் என்றும் இலங்கையிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் உள்ள எமது மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். அதை விட ஆச்சரியம் எதுவென்றால் அநுர குமாரவிற்கு வாக்களிக்காமல் ரணிலுக்கும் சஜித்திற்கும் வாக்களித்த மக்களில் பெரும்பாலானோர் மனங்களிலும் ‘மாற்றங்கள்’ ஏற்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன என்பதே உண்மை.!
இவ்வாறான ஒரு ஆட்சிக்கு எமது தமிழ் மக்கள் சிறிது கால அவகாசம் வழங்கிப் பார்க்கலாம். அவசரப்பட்டு எதிரான விமர்சனங்களை ‘பறக்க’ விடுவதிலும் பார்க்க. சற்று அவதானத்துடன் இருந்தால். முன்னைய ஆட்சிகள் போல் அல்லாது. சற்று ‘மூச்சு’ விடக்கூடியதான் காலம் வரலாம். அரசு என்னும் ‘கஜானாவை’ பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் ‘பாதிக்கு பாதி’ இருக்க வேண்டும்.