பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், ஹிரித்திக் ரோஷன், ரிமி சென், உதய் சோப்ரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் ‘தூம்’. இதன் வெற்றியைத்தொடர்ந்து, அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி கவனம் பெற்றன. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு தூம் 3 வெளியானது. இதில், அபிஷேக் பச்சன், அமீர்கான், உதய் சோப்ரா, கத்ரினா கைப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது இதன் 4-வது பாகத்தை உருவாக்க படக்குழு மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகை குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அதன்படி, முன்னதாக இப்படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் காணும் நடிகர் ரன்பீர் கபூரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
