“மாற்றத்துக்கான இளையோர்” எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று 29-09-2024 அன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இளைஞர்களுக்கும், புதிய முகங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில், யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்.
இதன்போது சுயேட்சையாக இளைஞர்களை தேர்தலில் போட்டியிட வேண்டும் என இளைஞர்களால் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், இந்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முடிவு இல்லை என தீர்மானிக்கப்பட்டது.
இளைஞர்களை ஒன்று திரட்டி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டதுடன், கட்சிகளுக்கு இளைஞர்களை உள்வாங்க அழுத்தம் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் அக்குழுவின் செயலாளர் அந்தோனிமுத்து ஜெயாளன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இன்று பல்வேறு பகுதியிலும் இருந்து இளைஞர்கள் கலந்து கொண்டனர். அனைத்து கட்சிகளுக்கும் இளைஞர்களை உள்வாங்குவதற்கு அழுத்தம் கொடுப்பது எனவும், சுயேட்சையாக போட்டியிடும் இளைஞர்களுக்கு அவர்களின் பின்னணி அறிந்து ஆதரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்குழுவை வழிநடத்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வடக்கு மாகாணத்தில் இளைஞர்களை ஒன்று திரட்டி இளம் தலைவரை தெரிவு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
தென்னிலங்கை அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து உங்களை களம் இறக்கியதாக கூறப்படுவது தொடர்பில் வினவிய போது,
சமூக வலைத்தளங்களில் அவ்வாறு சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. உண்மையில் அவ்வாறு எமக்கு யாரும் பணம் தரவில்லை. நாங்கள் சுயாதீனமாகவே இயங்குகிறோம். அவ்வாறு சேறு பூசுபவர்கள் பணம் பெற்றிருந்தால் நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.