காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர். அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இதற்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது.
