ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான், நேற்று முன் தினம் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்தால் தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை 200க்கும் அதிகமான ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் முக்கிய இலக்குகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் உளவுத்துறை முன்பே அறிந்துகொண்டதால் பெரும்பாலான இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தற்போதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்றன. இதனால் வான்பாதுகாப்பு மற்றும் அதிநவீன விமானங்களை கொண்டுள்ள இஸ்ரேல் ஈரானை விட வான்பரப்பில் வலிமையான நாடாக திகழ்கிறது. இந்நிலையில் ஈரானில் உள்ள முக்கிய பொருளாதார மையங்களை தாக்குவதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பொருளாதார தடைகளால் பெரும் பின்னடைவில் இருக்கும் ஈரானுக்கு மேலும் பொருளாதார சிக்கல்களை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. இதன்படி ஈரானின் முக்கிய எண்ணெய் கிணறுகளை தாக்கி அழிக்க இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.