நான் அனுமதிப்பத்திரம் விற்பனை செய்யவில்லை சிபாரிசுக் கடிதம் மட்டுமே வழங்கினேன் என்று மக்களை ஏமாற்றும் – சி.வி.விக்னேஸ்வரன்
எஸ்.ஆர்.ராஜா
இலங்கையில் மதுபானசாலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுபானசாலைகள் அதிகரிக்கும் போது அங்கு பாரிய குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கான அடித்தளங்கள் திறக்கப்படுவதாகவே கருதவேண்டும். இம் மதுபானசாலைகள் திறக்கப்படும் இடம் தொடர்பான முன்னர் பல வரையறைகள் காணப்பட்டன. அதாவது பாடசாலைகள், ஆலயங்கள், பொது நிறுவனங்கள் போன்ற முக்கிய நிறுவனங்களுக்கு அருகில் இவை அமைக்கப்படக் கூடாது என்பது பொதுவான விதிமுறை.
இத்தகைய விதிமுறைகள் முன்னர் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சின் பேரில் மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதியானது வழங்கப்பட்டு வருகின்றமையினால் அத்தகைய மதுபானசாலைகளை நிறுவுதற்கான இடம் தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. இதன் காரணமாக குடிமனைகள், பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் என எவற்றினையும் கருத்தில் கொள்ளாது தமக்கு பிடித்த இடங்களில் எல்லாம் மதுபானசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது அரசியல் மயப்படுத்தப்பட்டுக் காணப்படுவதால் எவராலும் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாது காணப்படுகின்றமை உண்மையே.
அண்மையில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அனுரகுமார திஸநாயக்க அவர்கள் அண்மையில் தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடன் அரசியல் வாதிகளை வளைப்பதற்காக வழங்கப்பட்ட அனைத்து மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட வேண்டும் என அறிவித்ததைத் தொடர்ந்து பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது. அதுமட்டுமன்றி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இவ் அனுமதிப்பத்திரங்களைப் பெற்று பாரிய தொகையினை வருமானமாக ஈட்டியுள்ளமையும், சிபார்சுக் கடிதம் வழங்கி பணம் பெற்றுள்ளமையும் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் இதுவரையில் 180 இற்கும் மேற்பட்ட மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகளவான மதுபானசாலைகள் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்தவகையில் மலையகத்தில் தேர்தல் காலங்களில் அதிகளவான புதிய மதுபானசாலைகள் உருவாக்கப்பட்டதாகவும் இவற்றை தடுக்குமாறு பொதுமக்கள் – நலன்விரும்பிகள் அரசியல் வாதிகளை கேட்டுக்கொண்டபோது அது கொழும்பு அரசாங்கத்தின் தீர்மானம் அதை நாம் எதுவும் செய்ய முடியாது என்று கூறி நழுவிச் சென்றார்கள். ஆனால் ஜனாதிபதித் தேர்தலின் பின் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்ற பின் புதிய மதுபானசாலை தொடர்பான அரசியல் வாதிகளின் தலையீடுகள் அனைத்தும் வெளியில் வந்துள்ளன.
அத்துடன் வடக்குக் கிழக்கில் பல அரசியல் வாதிகளும் இவ்வாறு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை பெற்று அவற்றின் மூலம் பணம் சம்பாதித்த விடயம் தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் தேர்தல் காலத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் பெயரில் கிளிநொச்சி பரந்தன் சந்தியில் மதுபானசாலை ஒன்று உள்ளதாக செய்தி வெளியாகி பின்னர் அது பொய்யான தகவல் என்று அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமன சி.வி.விக்னேஸ்வரனினால் கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதி பத்திரங்களில் அவரின்; கோட்டாவில் வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த விடயம் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.
குறித்த சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன் இவ் மதுபானசாலை அனுமதி பத்திரத்தினை தாய் தந்தை அற்ற ஒரு பெண்மணிக்கே பெற்றுக் கொடுத்தேனே அன்றி நான் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் கரடிப்போக்குச் சந்தியில் இயங்கும் மதுபான சாலை ஒன்றுக்கான அனுமதி வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடாகப் பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுபானசாலைக்கான அனுமதி
ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்தவகையில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் சிபார்சின் அடிப்படையில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் தகவல் வெளியாகியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அங்கஜன் இராமநாதனின் தந்தையின் சிபார்சின் பேரிலும் ஒரு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்பட்டதற்கான கடிதம் கூட வெளிவந்திருந்தது.
இவ்வாறு ஒவ்வொருவர் தொடர்பாகவும் நாளுக்கு நாள் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்குக் கிடைக்கும் கோட்டாக்களை மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தாது தமது தனிப்பட்ட வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்குடனேயே செயற்பட்டு வந்தார்கள்.
இதேவேளை, கடந்த புதன்கிழமை 02.10.2024 அன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த எம்.ஏ.சுமந்திரன் கடந்த ஆட்சியில் மதுபானசாலை உரிமைப் பத்திரங்களை பெற்று வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அறிக்கை விரைவில் வெளிவந்தால் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகள் சிபாரிசு செய்து அதிகூடிய மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் எனவும் அது உடனடியாக அதுவும் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்படவேண்டும் எனவும் அவ்வாறு வழங்கப்பட்டாலே மக்கள் அரசியல் வாதிகளின் முகத்தினை இனங்காண முடியும்.
தற்போதைய ஜனாதிபதி எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படவேண்டியுள்ளது. எனெனில் இவ்வாறு மதுபானசாலை அனுமதிப்பத்திரம் தொடர்பான சர்ச்கை வெளியாகிக் கொண்டிருக்கும் போது மதுபானம் தொடர்பான மற்றொரு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.
பெருந்தொகையான வரியை செலுத்தாத மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக, இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய மதுபான ஆலைகளுக்கு இனி அனுமதி இல்லை என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
மதுபான சாலைகளின் வரி நாட்டுக்கு முக்கியமானது இவ் வருமானத்தின் அடிப்படையில் பாதிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும். அந்தவகையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான வரி நிலுவையாக 1.8 பில்லியன் ரூபா உள்ளதாக குறிப்பிட்ட அவர், நிலுவைத் தொகையை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்களின் 2025 ஆம் ஆண்டிற்கான உரிமத்தை நீட்டிக்க வேண்டாம் என்று, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நின்று விடாது நிலுவைத்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்களின் 2025 ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்த அவற்றை புதியவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஒட்டுமொத்தத்தில் ஜனாதிபதி எடுத்துள்ள இன் நடவடிக்கையானது நாட்டின் மதுபானம் தொடர்பான சில சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதுடன் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை அது பெற்றுக் கொடுப்பதாக உள்ளது.
இந்தவகையில் மதுபானங்களின் குடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உட்பட அத்துடன் துன்பத்னை அனுபவிக்கும் பெரும்பாலான மக்களின் வாக்குகள் ஜனாதிபதிக்கு பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
ஜனாதிபதி மேற்படி மதுபானசாலை தொடர்பான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டவர்களின் பெயர்கள் வெளிவந்ததும் தமிழ் மக்கள் பொதுவாக வடக்குக் கிழக்கில் உள்ளவர்கள் தமது அரசியல் தலைமைகளில் நிலைமை தொடர்பாக அறிந்து கொள்ளலாம்.
வடக்குக் கிழக்கில் உள்ள மக்கள் இம்முறை தேர்தலில் ஊழல்வாதிகள், சுயநலவாதிகள், மற்றும் பெரும்பாண்மை இன ஊழல் வாதிகளுக்கு சாமரம் வீசும் நபர்களை இனங்கண்டு நிராகரிப்பதுடன் இளமைத் துடிப்பும் இனப்பற்றும், சிறந்த கல்விப் பின்புலமும் அரசியல் சார்பான அறிவினையும் உடைய நபர்களை இனங்கண்டு அவர்களின் இலக்கத்திற்கு வாக்களிப்பதன் மூலம், எம் மக்களை விற்றுப் பிளைப்பு நடத்தும் அரசியல்வாதிகள், சுயநலவாதிகளை நிராகரிக்க முடியும் என்பது உண்மையே.