திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ இயக்குநர் கண்காணிப்பில் மத்திய, மாநில அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக கூறும் கடந்த ஜூலை மாத ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருப்பதி லட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் தெரிவித்ததாவது: “திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு விசாரணை குழு உறுப்பினர்கள் மீது எந்தவித அதிருப்தியும் இல்லை. ஆனால் இந்த சிறப்பு குழு விசாரணையை மத்திய விசாரணை அமைப்புகளில் உள்ள ஒரு உயர் அதிகாரி கண்காணிக்கலாம் வேண்டும்”எனத் தெரிவித்தனர். இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கத் தடை இல்லை என்றும் சிபிஐ, காவல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகியவை இணைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியலை பயன்படுத்துவதை விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ இயக்குநர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கலாமா ? என அனைத்து தரப்பிடமும் கருத்து கேட்கப்பட்டது. மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இணைந்து 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்றும் அதன் விசாரணையை சிபிஐ இயக்குநர் கண்காணிப்பார் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.