இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டை நெருங்கி வரும் சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த சூழலில், நடத்திய பதிலடி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை தொடுத்தது. இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு 200-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஈரானிய அரசு வீசி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இஸ்ரேலின் 2 ராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அவற்றில் பல ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து, அழித்து விட்டோம் என இஸ்ரேல் கூறியது. ஆபரேசன் ட்ரூ பிராமிஸ் 2 என்ற பெயரில் ஈரான் நடத்திய இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்து உள்ளார். ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. அதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இந்த சூழலில், அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் கூறும்போது, பைடனிடம் இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க படைகளை அனுப்புவீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பைடன், நாங்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு உதவிவிட்டோம். இஸ்ரேலை நாங்கள் பாதுகாக்க போகிறோம் என்றார். இதனை தொடர்ந்து பேசிய டிரம்ப், ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என குறிப்பிட்டார்.