நாகை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஓ.எஸ்.மணியன். இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். இவர் தினமும் வேதாரண்யத்தில் இருந்து காரில் நாகப்பட்டினம் சென்று கட்சி பணிகளை மேற்கொள்வது வழக்கம். அதன்படி, ஓ.எஸ்.மணியன் தனது காரில் வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி காரில் புறப்பட்டு சென்றார். அவரின் கார் திருப்பூண்டி காரைநகர் அருகே சென்ற போது, குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரின் ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த மதில் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. சீட்பெல்ட் அணிந்திருந்ததால் ஓ.எஸ்.மணியன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேநேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், அவர் திருப்பூண்டியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஓ.எஸ்.மணியன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. இந்த சம்பவம் திருப்பூண்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து வேளாங்கண்ணி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.