ஜோர்ஜ்டவுன் அக்.07:
நிகழும் 2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதி குறியீட்டு வரிசையில் 163 நாடுகளில் மலேசியா 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக மலேசியாவின் தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பினாங்கு வடகிழக்கு மாவட்ட அளவில், அக்டோபர் 06, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒற்றுமைத் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தப் பட்டியலில் ஆசிய மண்டலத்தில் சிங்கப்பூருக்கு அடுத்து 2ஆவது இடத்தை மலேசியா பிடித்துள்ளதாக சுட்டிக் காட்டினார்
இந்நாட்டின் அமைதிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அனைத்து தரப்பினரின் பங்களிப்புதான் காரணம் என்பதை இந்தக் குறியீடு காட்டுகிறது. இத்தகைய சாதனை, நாம் அனைவரும் பெருமைப்படக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமயங்களுக்கிடையிலான அமைதியும் நல்லிணக்கமும் வலுப்பெற தேசிய ஒற்றுமைத் துறை பல திட்டங்களை வகுத்து வருகிறது. மலேசிய மக்கள் நிலைநாட்டும் ஒற்றுமை, ஒரு கலாச்சாரமாக தொடர வேண்டும் என்பதே தேசிய ஒற்றுமைத் துறையின் இலக்கு என்றும் அந்த நிகழ்ச்சியில் பேசிய துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒரோர் இடங்களில் சமயங்களுக்கிடையே நிலவும் குறைந்த புரிந்துணர்வு மற்றும் கருத்து வேறுபாடு, சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலை மட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், மலேசிய கூட்டு சமுதாயத்தில் இது ஒரு முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் என்று துணை அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.
எது எவ்வாறாக இருந்தாலும் நாட்டின் வளப்பத்திற்கும் கூட்டு சமுதாயத்தின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைதான் அடித்தளம் என்று ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்தும் நம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை நாம் அனைவரும் சிந்தையில் கொள்ள வேண்டும் என்றும் துணை அமைச்சர் க.சரஸ்வதி வலியுறுத்தினார்.