80-களில் திரையுலகில் நடிகை ரேவதி மிகவும் பிரபலமாக இருந்தார். புன்னகை மன்னன், மௌன ராகம், அரங்கேற்ற வேலை, மண் வாசனை, வைதேகி காத்திருந்தாள், மகளிர் மட்டும், அஞ்சலி போன்ற பல வெற்றி தமிழ் திரைப்படங்களில் நடித்து இருந்தார். இது தவிர்த்து ரேவதி மலையாளம் மற்றும் இந்தி திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை இயக்கவும் செய்துள்ளார் ரேவதி. முதன் முதலாம் 2002 ஆம் ஆண்டு மிடிர், மை ஃப்ரெண்ட் என ஆங்கில படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த ஆங்கில திரைப்படத்திற்கான விருதை பெற்றது. கடைசியாக 2022 ஆம் ஆண்டு கஜோல் மற்றும் விஷால் ஜெத்வா நடிப்பில் வெளியான சலாம் வெங்கி திரைப்படத்தை இயக்கினார். தற்பொழுது அடுத்ததாக ஒரு வெப் தொடரை இயக்க தயாராகியுள்ளார் ரேவதி. இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இத்தொடரில் இணை இயக்குனராக சித்தார்த் ராமசாமி பணியாற்றவுள்ளார். இதனை ரேவதி அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு மற்றும் நடிகர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.