– முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
ஈபிடிபி கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. அதனை வெற்றி கொள்வதற்கான நேர்த்தியான வேலைத்திட்டங்களை நெறிப்படுத்தியே உரிய பொறிமுறையுடன் தனது பயணத்தை தொடர்கின்றது என சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஒற்றுமை ஐக்கியம் என பேசிக்கொண்டுருப்பவர்கள் இன்று தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து தமது சுயநலன்களுக்காக சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமையன்று (14.10.2024) கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழர்களின் பிரதிநிதிகள் தாம் தான் என மார்தட்டிய கூட்டத்தினர் இன்று தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழரசு கட்சி, சுயேட்சை என திசைக்கொன்றாக பிரிந்து தமது சுயநலன்களை ஈடுசெய்வதற்காக தேர்தலில் போட்டிபோடுகின்றார்கள்.
இதேநேரம் தமிழரசு கட்சி என கூறிக்கொண்டு இருப்பவர்களும் இரண்டு அணியாக பிரிந்து செயல்படுகின்றார்கள்.
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும். அதுதான் அடிப்படை ஆனால் இங்கு நல்ல நோக்கத்திற்காக அந்த சுதந்திரத்தினை பயன்படுத்தாமல் அவர்கள் தத்தமது சுயலாபத்திற்காக பயன்படுத்துகின்றார்கள்.
அதனைவிட தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் இன்று சங்கை ஊதிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
இன்னொருபுறம் 13.10.2024) அன்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் கலந்துரையாடலில் சங்கு சின்னத்தை கொண்டுவாறவர்கள் கொலை, கொள்ளை, வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எனவும் அதனாலே நாம் அவர்களை வெளியில் துரத்தி விட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்கள். ஆனால் அது உண்மை அல்ல. மாறாக சுயலாபத்திற்காகவே இவ்வாறு கூறியுள்ளார்கள்.
ஏனெனில் இவ்வாறு இன்று குற்றம் சுமத்தப்படும் அவர்களின் உண்மை நிலையை அன்று இவர்கள் தெரிந்திருக்கவில்லையா?
ஆனால் ஈபிடிபி அவ்வாறு அல்ல. ஈபிடிபி அதில் இருந்து மாறுபட்டது.
ஈபிடிபி யதார்த்தமான கொள்கையை முன்வைத்து அதனை அடைவதற்கான வேலைத்திட்டங்களை நீண்டகாலமாக முன்னெடுத்து வருகின்றது. இன்றும் அதை நோக்கியே செயற்பட்டு வருகின்றது.
இதேநேரம் ஈபிடிபிக்கு பேரம்பேசும் சக்தியாக போதிய ஆசனங்களை மக்கள் வழங்கியிருக்கவில்லை். போதிய ஆசனங்கள் இருக்குமாக இருந்தால் மக்களுடைய அபிவிருத்திக்கான, அரசியல் உரிமைக்கான தீர்வு என மூன்று வகையான பிரச்சினைகளையும் எம்மால் தீர்க்க முடியும்.
இதேநேரம் இம்முறை எமக்கு 5 ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என நான் எதிர்பார்கின்றேன். அவ்வாறு கிடைத்தால் இரண்டு வருடத்திற்குள் பிரச்சினைகளை எம்மால் தீர்க்கமுடியும்.
எமது கொள்கையை எற்றும் நாம் முன்னெடுக்கும் வழிமுறையை ஏற்றும் மக்கள் அணிதிரண்டு எம்முடன் பயணிக்கவேண்டும் என்றே அழைப்பு விடுக்கின்றெனே தவிர வாக்குகளை அபகரிக்க நான் இவற்றை முன்வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.