காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியத் தூதருக்கு தொடர்பிருப்பதாக கனடா குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், கனடாவுக்கான தூதரை இந்தியா திரும்ப பெற்றிருக்கிறது. கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டதிலிருந்து இந்தியா-கனடாவின் உறவு அவ்வளவு சுமூகமாக இருக்கவில்லை. ஹர்தீப் சிங் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்தது. இவர் காலிஸ்தான் விடுதலைக்கு செயல்பட்டதாகவும், காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கியதாகவும் இந்திய உளவுத்துறை ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது.
இது தவிர கடந்த 2007ம் ஆண்டு பஞ்சாப்பின் லூதியானா நகரில் 6 பேர் கொலைக்கு காரணமாக வெடிகுண்டு தாக்குதலிலும் இவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். நாடு முழுவதும் போலீசும், புலனாய்வு அமைப்புகளும் இவரை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் இவர் குடியேறினார். கொஞ்ச காலத்தில் கனடா குடியுரிமையும் இவருக்கு கிடைத்துவிட்டது. ஆனாலும் இவரை விடாது துரத்தி, தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என கனடாவுக்கு கோரிக்கை வைத்தது பஞ்சாப் போலீஸ். கனடா இந்த கோரிக்கைக்கு அசைந்துகூட கொடுக்கவில்லை. இது நிஜ்ஜாருக்கு தோதாக அமைந்துவிட மேலும் பல குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கினார். இப்படி இருக்கையில்தான் தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என களத்தில் இறங்கியது இந்தியா. இந்தியா கேட்க, கனடா மௌனம் சாதிக்க நாட்கள் சென்றுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக அவர் கனடாவிலேயே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது குறித்து விசாரணையில் இறங்கிய கனடா உளவுத்துறை, இந்த கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியது. இப்படி சொன்னது வேறு யாரும் இல்லை, அந்நாட்டு பிரதமர் ட்ரூடோதான். குற்றச்சாட்டு சொன்னதோடு நிற்காமல் இந்தியா தூதரக அதிகாரி ஒருவரையும் ட்ரூடோ, கனடாவிலிருந்து வெளியேற்றினார். பதிலுக்கு இந்தியாவும் 41 கனடா நாட்டின் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. இந்த பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஆனால் இப்போது இதே பிரச்னை மீண்டும் பூதாகரமாக வெடித்து கிளம்பியிருக்கிறது. அதாவது, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவுக்கான இந்தியத் தூதருக்கு தொடர்பிருப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் இதுவரை இல்லாத வகையில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என்று கூறி, டெல்லியில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியது.
மேலும், “அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது கனடா. இந்தியா பலமுறை கேட்டும் இந்த வழக்கு குறித்த எந்தவொரு சிறிய ஆதாரத்தையும் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த சமீபத்திய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது இந்தியா மீதான கனடா பிரதமர் ட்ரூடோவின் விரோதம் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு இந்திய-விரோத பிரிவினைவாதத்திற்கு உதவுகிறது” என்று இந்தியா கனடாவின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறது. இத்துடன், “கனடா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். எங்கள் தூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய கனடா அரசாங்கத்தின் நடவடிக்கை மீது நம்பிக்கை இல்லை” என்று கூறிய இந்தியா, கனடாவில் உள்ள இந்திய தூதரக உயர் ஆணையர் சஞ்சய் வர்மா உட்பட குறிப்பிட்ட தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது.