கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமரின் சமீபத்திய பேச்சு இருநாட்டு உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரியை வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டதை அடுத்து இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் ஆறு பேரை இந்தியா வெளியேற்றியுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா மாறிவருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கனடாவில் இயங்கி வரும் சீக்கிய அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் உள்ள சீக்கிய மத வழிபாட்டுத் தலமான குருத்துவாராவின் பார்க்கிங் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மரணத்துக்குப் பின் இந்திய தூதரக அதிகாரிகள் இருப்பதாக கனடா அப்போது குற்றம்சாட்டியதை அடுத்து இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டதை அடுத்து கனடா நாட்டினருக்கான விசா நடைமுறைகளை 2 மாதங்கள் இந்தியா நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் கனடாவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் நிஜ்ஜார் படுகொலை விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிக்கு நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வும் இதே கருத்தை வெளியிட்டார்.
தவிர, கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேற்றவும் உத்தரவிட்டார். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கனடாவுக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள அந்நாட்டு தூதரக அதிகாரிகள் ஆறு பேரை வெளியேற்றியுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியா ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக கனடா குற்றம்சாட்டி உள்ளது.
அதேவேளையில் பிரிவினை வாதிகளின் புகலிடமாக கனடா மாறிவருவதாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. நூறாண்டுகளுக்கும் மேலாக கனடாவில் சீக்கியர்கள் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த பத்து இருபது ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது. உலகளவில் இந்தியர்கள் அதிகம் வாழும் நாடாக கனடா உள்ள நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள இந்தியர்களில் 90 சதவீதம் மக்கள் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா அரசியலில் இவர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டு அமைச்சரவையிலும் இவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை ஜஃமீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி கடந்த சில மாதங்களுக்கு முன் திரும்பப் பெற்ற நிலையில் அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்தியா – கனடா இடையிலான உறவில் ஏற்பட்டிருக்கும் பிளவு இருநாட்டு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்தியா – கனடா இடையே சுமார் ரூ. 60000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு ரூ. 40000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.