பு.கஜிந்தன்
நாம் முன்னெடுத்துவரும் இணக்க அரசியல் பொறிமுறையூடாக தமிழ் மக்களின் நலன்சார்ந்து பலவற்றை சாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் எமது தரப்பின் முயற்சியின் காரணமாகவே 13 ஆவது திருத்தச் சட்டமும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் 14ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் மேற்கொண்டு ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
கிடைத்திருக்கும் உரிமைகளையும் இல்லாமல் செய்யும் போக்கிலேயே சக தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் அமைந்து வருகின்றன எம்மை பொறுத்தளவில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டுக்கமையவே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இதேநேரம் இம்முதுறை ஈ.பி.டி.பி 7 தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய 10 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. அத்துடன் நடைபெறவுள்ள தேர்தல் என்பது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானது.
ஏனெனில் எவர் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கின்றார்கள், எவர் மக்களது சேவகர்களாக இருந்து செயற்படுகின்றார்கள், எவர் சுயநலன்களுக்காக செயற்படுகின்றார்கள் என்பதை மக்கள் நிர்ணயிக்கின்ற தேர்தலாக இது இருக்கின்றது. ஏனெனில் மக்கள் தற்போது உண்மையை கண்டுகொண்டுவிட்டனர்.
எமது அரசியல் செயற்பாடுகளையும் நாம் முன்னெடுக்கும் பொறிமுறைகளையும் நாம் வெளிப்படையாகவே கூறுகின்றோம். இதை மக்கள் ஏற்று அணிதிரண்டு எமது சின்னமான வீணைக்கு வாக்களித்து எம்மை அரசியல் பலம் மிக்கவர்களாக்குவாரகள் என நம்புகின்றோம்.
இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு ஆசனங்களை பெற்றிருந்த ஈ.பிடி.பி இம்முறை எத்தனை ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில் – பல சந்தர்ப்பங்களில் ஒரு ஆசனத்தை தான் மக்கள் எமக்கு தந்திருந்தார்கள். ஆனாலும் கடந்த தேர்தலில் வன்னியிலும் ஓர் ஆசனம் கிடைத்தது இது எமது சேவைக்கும் கொள்கைக்கும் மக்கள் வழங்கிய அங்கிகாரம்.
நாம் சொல்வதை செய்பவர்கள், செய்வதையே சொல்பவர்கள். அதனால் மக்கள் எம்மை உன்னிப்பாக அவதானிக்க தொடங்கியுள்ளார்கள். இதனடிப்படையில் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் எமக்கு 7 ஆசனங்களை பெறுவதற்கான ஆணையை தருவார்கள் என நம்புகின்றோம். மக்களது ஆணையே எமது நிலைப்பாடாகவும் உள்ளது.
இதேநேரம் பல்வகை மதம் இனம் சார்ந்தவர்கள் இருக்கும் நாட்டில் அவரவர் தத்தமது சார் நிலைப்பாட்டை முன்வைத்தே செயற்படுவார்கள்.
எம்மிடம் சுயநலமற்ற தடம் மறாதா கொள்கை இருக்கின்றது. அதனை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றலும் சிறந்த தலைமைத்துவ வழிகாட்டலும் இருக்கின்றது இதை கடந்தகால வரலாறுகளே சாட்சி சொல்லும்.
அந்தவகையில் மத்தியில் ஏற்பட்டதைப் போன்று தமிழ் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை கொண்டுவர தமிழ் மக்கள் தற்போது முயற்சிக்கின்றனர்.
அந்த மாற்றம் எம்மை நோக்கியதாக இருக்கின்றது என்றும் தெரிவித்த அவர் கார்த்திகை 14 ஆம் திகதியன்று தமிழ் மக்கள் அணி திரண்டு வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து எம்மை அரசியல் ரீதியில் பலம் மிக்கவர்களாக்குவார்கள் என்று நம்புகின்றோம்.
குறிப்பாக சந்தர்ப்பவாதிகளையும் மக்கள் சேவகர்களையும் மக்கள் இனங்காணும் நேரம் இது என சுட்டிக்காட்டியுள்ள அவர் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என்றும் அந்த மாற்றம் எமக்கு கிடைக்கும் பட்சத்தில் தமிழ் மக்களது தீர் துயரங்களுக்கும் தீர்வு கிட்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.