இலங்கைக்கான கனடிய தூதுவர் வடபகுதி தீவக மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்
இலங்கையின் வட பகுதியில் உள்ள சப்த தீவுகளில் சுமார் 1,500 மீனவர்கள் உள்ளனர் ஆனால் அவர்களுக்காக ஒரு எரிபொருள் நிலையம்கூட இல்லாதமை மீனவர்களின் பெரும் பிரச்சனையாக காணப்படுவதாக இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (Eric Walsh) அவர்கள் கடந்த 14-10-2024 அன்று யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவக பெண்கள் வலையமைபின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்.புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமுக நிலைய மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போதே மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளால் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்றவற்றின் முக்கியமான வாழ்வாதாரமாக கடற்றொழிலே காணப்படுகின்றது. இங்கே சுமார் 1,500 மீனவர்கள் கடல் தொழிலை நம்பியுள்ளபோதும் ஒரு எரிபொருள் நிலையம்கூட இல்லாதமை மீனவர்களின் பெரும் பிரச்சணையாக காணப்படுவதோடு தீவை அண்மித்த கரையிலும் எரிபொருள் நிலையம் இல்லை.
இதேநேரம் அதிக மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றம் ஏற்பட்டால் படகுகளை நங்கூரம் பாச்சி பாதுகாக்கவும் ஒரு துறைமுக வசதிகிடையாது, இதேநேரம் தீவுகளில் நெடுந்தீவில் ஒரு நோயாளர் காவு படகுச் சேவையே காணப்படுகின்றது இது ஏனைய தீவுகளிற்கும் விரிவுபடுத்துவதே தீவக மக்களின் நிலையான வாழ்வியலிற்கு உறுதுணையாக அமையும் போன்ற விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டது.
இச் சந்திப்பில் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்ச்சன் பிகிராடொ, தீவக பெண்கள் வலையமைப்பினர், தீவக பகுதி கடற்றொழில் அப்புக்களில் நெடுந்தீவு சமாசத் தலைவர்
யூலியான் குரூஸ், நெடுந்தீவு,நயினாதீவு, அனலைதீவு பிரதேச மீனவ பெண்கள் அமைப்பைச் சேர்ந்த மூவர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்