முனைவர் மு. இளங்கோவன்
புதுச்சேரி, இந்தியா
மாவிலி மைந்தன் என்னும் புனைபெயரில் எழுதும் சண்முகராசன் சின்னத்தம்பி யாழ்ப்பாணத்தை அடுத்த நெடுந்தீவில் பிறந்தவர். தற்பொழுது கனடாவில் வாழ்ந்து வருகின்றார். கனடா தொல்காப்பிய மன்றத்தின் செயலாளராக உள்ளவர். செவிலியர் பயிற்சி பெற்று, இலங்கை, ஓமன், கனடாவில் பணியாற்றியவர். மரபுக் கவிதையில் ஈடுபாடு கொண்டவர். வைகறை வானம், மனவெளி மேகங்கள், முனையிலே முகத்து நில் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதுடன் தன்னார்வலராக இருந்து பலருக்கும் யாப்பு இலக்கணங்களைப் பயிற்றுவித்து வருகின்றார்.]
அண்மையில் கனடாவில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் ஓர் அங்கமாகத் தொல்காப்பியம் குறித்த கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கம் என்றால் பலருக்கும் ஒவ்வாமை இருக்கும். ஒரே வரியைப் பாவலர்கள் மீண்டும் மீண்டும் படித்து, பார்வையாளர்களை எரிச்சலடையச் செய்துவிடுவார்கள். அவ்வாறுதான் இந்தக் கவியரங்கமும் இருக்கும் எனப் பார்வையாளர் வரிசையில் இருந்த நானும் கருதிக்கொண்டிருந்தேன். ஆனால் நடந்ததோ வேறு வகையில் இருந்தது.
பாவலர் சண்முகராசன் சின்னத்தம்பி தலைமையில் அன்பின் ஐந்திணை என்னும் தலைப்பில் ஐந்து பாவலர்கள் கவிதை படைத்தனர். பாவரங்கத் தலைவர் சண்முகராசன் அவர்கள் தம் தலைமைக் கவிதையை வழங்கியதுடன் பாலை என்னும் திணையைக் குறித்தும் கவிதை படைத்தார். அவரின் சொல்லாட்சியும் எடுத்துரைப்பும் மரபு வடிவத்தை ஆளும் புலமையும் நேரில் கண்டு வியப்புற்றேன். மேடையிலிருந்து இறங்கி வந்ததும் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வேட்கை மிகுந்தது. ஆர்வமுடன் அவர் பணிகளையும் தமிழ்ப் பங்களிப்பையும் அறிந்து வியப்புற்றேன். செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டயப் படிப்பினைப் பயின்றவுடன் பணியில் இணைந்த சண்முகராசன் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய பட்டறிவு உடையவர். அவர்தம் வாழ்வியலையும் தமிழ் இலக்கியப் பங்களிப்பையும் இக்கட்டுரையில் வரைகின்றேன்.
சண்முகராசன் சின்னத்தம்பியின் இளமைப் பருவம்
மாவிலி மைந்தன் என்னும் புனைபெயரில் படைப்புகளை நல்கும் சண்முகராசன் யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவைச் சேர்ந்தவர். 03.05.1947 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் சின்னத்தம்பி, நாகமுத்து அம்மையார் ஆவர். தம் ஏழாம் அகவையில் தந்தையை இழந்த சண்முகராசன் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். பள்ளிக் கல்வியை நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பயின்றவர்(1964). உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பயின்றவர்(1966). செவிலியர் பயிற்சியில் இணைந்து 1967 முதல் 1970 வரை பயின்று, பட்டயச் சான்று பெற்றவர். பின்னர் அத்துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர். கொழும்பில் அமைந்துள்ள கல்லூரியில் பட்ட மேற்படிப்புக் கல்வியை நிறைவுசெய்தவர் (1974-77). பேராதனையில் அமைந்துள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியியல் பிரிவிலும் பயின்று பட்டம்பெற்றுள்ளவர். டொரான்டோவில் அமைந்துள்ள சோர்ச்சு பிரவுன் கல்லூரியில் 20021 ஆம் ஆண்டில் அவசர நோயாளார் பராமரிப்பில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்.
சண்முகராசன் சின்னத்தம்பியின் மருத்துவத்துறைப் பணிகள்
கொழும்பு மருத்துவமனையில் அவசரப் பிரிவில் செவிலியர் அதிகாரியாக முதன்முதல் பணியேற்றவர்(1970-74). யாழ்ப்பாணம் செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக 1977-83 வரை பணியாற்றியவர். மட்டக்களப்பு செவிலியர் பயிற்சிக்கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றியவர்(1979-81). 1983 முதல்1999 வரை ஓமன் நாட்டின் மஸ்கட் செவிலியர் கல்லூரியில் மூத்த விரிவுரையாளராகவும், பாடத்திட்ட ஆக்கக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியவர். 1999 ஆம் ஆண்டில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பிறகு டொராண்டோ கிழக்குப் பொது மருத்துவமனையின் அவசரப் பிரிவில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கனடா ஜேஆர்எஸ் கல்லூரியில் மருத்துவத்துறைப் பகுதிநேர விரிவுரையாளரகப் பணியாற்றுகிறார்.
தம் தமிழ் ஆர்வத்தின் காரணமாக டொராண்டோ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் ஈராண்டுகள் பயின்று, தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர்(2018). இங்குப் பயின்ற காரணத்தால் தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சியும், புலமையும் ஏற்பட்டதால் மரபுக் கவிதைகள் எழுதுவதில் இவருக்குப் பெரிய விருப்பம் உண்டானது.
சண்முகராசன் சின்னத்தம்பி அவர்கள் முறையாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்ற காரணத்தால் இவர் கவியரங்குகள் பலவற்றைத் தலைமையேற்று நடத்தும் தகுதிப்பாடும் அடைந்தார். இணையம் வழியாகவும், மேடை நிகழ்வாகவும் பல கவியரங்கங்கள் இவ்வாறு நடந்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் தன்னார்வலராகத் தமிழ் விரிவுரையாளர் பணியும் ஆற்றியவர். கனடாத் தமிழ்க் கவிஞர் மன்றதின் தலைவராகவும் செயல்பட்டவர்.
சண்முகராசன் அவர்கள் கமலாதேவி அவர்களை 21.11.1973 இல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாழினி, மைதிலி, நவநீதன், சாலினி ஆகிய மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.
சண்முகராசன் அவர்கள் பெற்றுள்ள விருதுகள்
சண்முகராசன் சின்னத்தம்பியின் தமிழ் இலக்கிய மற்றும் சமூகப் பணிகளைக் கண்டு அரசும், தமிழமைப்புகளும் பல்வேறு விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளன. அவற்றுள் கீழ்வரும் விருதுகள் குறிப்பிடத்தக்கன.
- தன்னார்வத் தொண்டுப்பணி விருது, ஒன்ராரியோ மாகாண அரசு, 2014
- சிறந்த தமிழ்ப் பணிக்கான விருது, நினைவுகள் இணையத் தளம் 2020;
- சிறந்த மரபுக் கவிதை நூலுக்கான முதற்பரிசு (மனவெளி மேகங்கள்), தமிழ்நாடு திருவள்ளுவர் இலக்கியமன்றம், நல்லழகம்மை செல்லப்பன் அறக்கட்டளை 2021
- பாடலாசிரியர் விருது, தமிழாழி ஊடகம், மென்றியல் 2021
- பாவலர் விருது, கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம், 2022
- தமிழ்க் கலைச் சொல்லாக்கப் பங்களிப்புக்கான பாராட்டு அங்கீகாரம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், தமிழ் நாடு அரசு
- தமிழ் இலக்கியப் பணிக்காகத் தங்கப் பதக்கமும் விருதும் – தமிழர் தகவல் மாத இதழ், கனடா (2022)
- கவி ஆசான் விருது – கனடாத் தொல்காப்பிய மன்றம்(2022)
சண்முகராசனின் தன்னார்வத் தொண்டுகள்
சண்முகராசன் அவர்கள் தம் பணிநேரம் போகத் தம் மனத்துக்கு இனிய பொதுப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்தவர். அவ்வாறு இவரின் பணிகள் பல அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும் வளர்ச்சிக்கும் துணைசெய்துள்ளன. அத்தகைய அமைப்புகளின் விவரம்:
- முன்னாள் அமைப்பாளர், சௌக்கியதான இயக்கம் (மருத்துவ உதவித் தன்னார்வ அமைப்பு), யாழ். கிளை – 1978 – 1985
- முன்னாள் தலைவர், நெடுந்தீவுப் பாடசாலைகள் பழைய மாணவர் சங்கம், கனடா -2004
- முன்னாள் பொருளாளர், கனடாத் தமிழர் எழுத்தாளர் இணையம் – 2006
- முன்னாள் பொருளாளர், நெடுந்தீவு மக்கள் ஒன்றியம், கனடா – 2008
- முன்னாள் தலைவர், கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் – 2011 – 2015
- செயலாளர், தொல்காப்பிய மன்றம், கனடா 2022 – 2024
- தமிழ் மரபுரிமைத் திங்கள் செயற்பாட்டுக் குழு உறப்பினர்
- ஆசிரியர், கவிதை, யாப்பிலக்கணப் பயிலரங்கம் (சனிக்கிழமை தோறும் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் நடத்தும் இலவச வகுப்பு)
- பங்களிப்பு, தமிழ்க் கலைச் சொல்லாக்கம், செந்தமிழ் சொற்பிறப்பியல்
அகரமுதலித் திட்ட இயக்ககம், தமிழ் நாடு அரசு.
- பாடலாசிரியர்
- கவிதையால் இணைவோம், மாவிலி மைந்தனின் கவிதை முற்றம் – அமைப்பாளர், (திங்கள் தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை – சூம் செயலி வழியாகக் 3மணிநேரக் கவியரங்க நிகழ்ச்சி)
மாவிலி மைந்தனின் தமிழ்க்கொடை
சண்முகராசன் சின்னத்தம்பி அவர்கள் மாவிலி மைந்தன் என்னும் பெயரில் தமிழில் மரபுக் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு வைகறை வானம்,(2012), மனவெளி மேகங்கள்(2019), முனையிலே முகத்து நில்(2022) என்னும் நூல்களாக வெளிவந்துள்ளன. இந்த நூல்களில் இடம்பெற்றுள்ள கவிதைகள் யாவும் யாப்பிலக்கணத்தில் வரையப்பட்ட கவிதைகளாகும். புலம் பெயர்ந்த மண்ணில் இவர்போல் இலக்கிய ஈடுபாட்டுடன், யாப்பிலக்கணம் பயின்று கவிதை வரைவோர் குறைவு என்றே குறிப்பிடலாம்.
வைகறை வானம்
கவிஞரின் முதல் கவிதை நூல் இதுவாகும். பல்வேறு சூழல்களில் எழுதப்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டு வைகறை வானம் என்ற தலைப்பில் நூலாகியுள்ளது. இந்நூல் வெளிவருவதற்கு முன்னர் முழக்கம், உலகத் தமிழர், உதயன், தமிழர் செந்தாமரை, முரசொலி போன்ற இதழ்களில் பல கவிதைகளை இவர் வெளியிட்டுள்ளார்.
வைகறை வானம் நூலில் பகுதி 1. மரபுக் கவிதைகள் எனவும், பகுதி 2, கவியரங்கக் கவிதைகள் எனவும், பகுதி 3. விடுதலைக் காற்றில் விரிந்த மொட்டுகள் எனவும் கவிதைகள் பகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
மாவிலி மைந்தனின் நூலில் அழகிய சொல்லாட்சிகளும், சிதைவுறாத யாப்பு அமைப்புகளும், அழகிய கற்பனைகளும் உவமைகளும் இடம்பெற்றுள்ளன. இவை படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டுபவை ஆகும். இவரின் கவிதைகள் கற்பவரின் உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல்பெற்றவையாகும். தம் தாய் மண்ணான இலங்கையின் நெடுந்தீவு குறித்த மாவிலி மைந்தனின் பாடல்கள் அவரின் ஊர்ப்பற்றை உரக்கச் சொல்லும் கவிதை என்பேன்.
தெங்குபனை தென்றலிலே தோகையசைத் தாடும்
தோட்டத்து மரக்கிளையில் தேன்குயில்கள் பாடும்
தங்கத்தைக் குழைத்துமுகம் தடவியகீழ் வானம்
தனைவிட்டுக் கதிர்விலகத் தனிமையிலே வாடும்
பொங்குகடல் மீதினிலே மீனவரின் ஓடம்
பொன்மாலைப் போதினிலே பேரணியாய்ப் போகும்
அங்கமெலாம் அணிகலனாய் ஒளிரும்நற் கோலம்
அழகுறவே அமைந்ததெங்கள் அன்னைநெடுந் தீவே! (பக்கம் 59)
என்னும் பாடலில் செழுமையான யாப்பமைப்பும் கற்பனை நயமும் காட்சிப்படுத்திக் காட்டும் திறமையும் வெளிப்படுகின்றன. இவை பாவேந்தர் பாரதிதாசனாரின் அழகின் சிரிப்பை நமக்கு நினைவூட்டும்.
மருத்துவத்துறையில் மாமணியாக விளங்கிய மாவிலி மைந்தன் நலவெண்பா என்னும் தலைப்பிட்டு வரைந்துள்ள பாடல்கள் உடலோம்பலின் முதன்மையை நமக்கு எடுத்துரைக்கின்றன.
நன்றாக வேயுண்டு நாளும் உடல்வளர்த்தால்
கொன்றே ஒழிக்கும் கொடுநோய்கள் – இன்றேநீ
செய்வாய் உடற்பயிற்சி சீராக அஃதொன்றே
உய்யும் வழியாம் உணர்
எனவும்,
சர்க்கரை நோய்தன்னைச் சரிசெய்யா விட்டுவிட்டால்
சிக்கலால் நல்வாழ்வு சீரழியும் – எக்குறையும்
வாராது சக்கரையை வைத்தாலே கட்டுக்குள்
தீராது போமோ துயர்
எனவும் உடல்நலம் போற்றும் வெண்பாக்களை வரைந்து, மக்களுக்கு நலவாழ்வு வாழ வழிகாட்டியுள்ளார்.
ஈழ விடுதலைக்கு இன்னுயிர் ஈந்தவர்களின் ஈகத்தினைப் போற்றிப் பாடித் தம் நாட்டுப்பற்றையும் நம் பாவலர் மாவிலி மைந்தன் வெளிப்படுத்தியுள்ளார்.
மனவெளி மேகங்கள்
மனவெளி மேகங்கள் என்னும் நூல் பகுதி 1. பல்சுவைக் கவிதைகள் எனவும் பகுதி 2. வெண்பாச் சரம் எனவும் பகுதி 3. கவியரங்கக் கவிதைகள் எனவும் பகுதி 4. பாமாலை எனவும் தலைப்புகளைக் கொண்டுள்ளது. 78 கவிதைகளால் இந்த நூல் அமைந்துள்ளது. பல்வேறு யாப்பு வடிவங்களிலும் இசைப் பாடல்களுமாக இந்த நூல் உள்ளது.
அகிலத்தில் அறமோங்க வேண்டும் என்று முருகனை வாழ்த்திப் பாடும் பாடலுடன் இந்த நூல் தொடங்குகின்றது.
நயாகரா அருவியின் அழகினை,
மெல்ல நடந்தவுன் பாதையிற் – காணும்
மேட்டை யமைத்தவர் யாரடி? – நீயும்
செல்லும் வழிபள்ள மாக்கியே – சிறை
தள்ள நினைத்தவர் யாரடி? – அந்தப்
புல்லிய ரைப்பொடி யாக்கவோ – சினம்
பொங்கிப் புலியெனப் பாய்கிறாய்! – வெறும்
கல்லும் மலையும் தடுக்குமோ- உந்தன்
கட்டற்ற வேகத்தைத் தாண்டுமோ! (பக்கம் 47)
என்று பாடியுள்ளமை இவரின் கற்பனை ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது.
முனையிலே முகத்து நில்
மாவிலி மைந்தனின் முனையிலே முகத்து நில் என்னும் கவிதை நூல் பாரதியாரின் புதிய ஆத்திசூடியின் 110 பாடலடிகளையும் தலைப்பாக அமைத்து 110 கவிதைகளால் அமைந்த நூலாகும். பாரதியாரின் கவிதைகளில் மாவிலிமைந்தனுக்கு உள்ள ஈடுபாடும் சமூக அக்கறையும் இந்த நூலில் காணமுடிகின்றது.
அச்சம் தவிர் என்னும் பாரதியாரின் ஆத்திசூடியை உள்ளத்துள் கொண்டு மூன்று எண்சீர் விருத்தங்களை மாவிலி மைந்தன் படைத்துள்ளார்.
உள்ளத்துள் அச்சமெனும் வேரூன்றி விட்டால்
உலகமெலாம் இருண்டதுபோல் உருமாறிப் போகும்
மெல்லமெல்ல அதுவளர்ந்து முழுவிருட்ச மாகி
முழுதாக மூடியுந்தன் மூச்சினையும் நிறுத்தும்!
பள்ளத்தில் தள்ளிவிட்டுப் பலர்பார்க்கச் சிரிக்கும்
பரிதாப நிலைதந்து பக்கத்தில் இருக்கும்
தெள்ளியதாய் இவையனைத்தும் நேர்கொண்டே இன்றே
தீர்க்கமுடன் அச்சமதைத் தவிர்த்திடுதல் நன்றே! (பக்கம், 11)
என்று அச்சந்தவிர் என்ற ஒற்றை வரியை உள்ளத்துள் கொண்டு பாட்டால் உரைவரையும் மாவிலி மைந்தனின் பாப்புனையும் ஆற்றல் போற்றத்தக்கது.
பாரதியார் தீமைக்கு எதிராகக் குரல் கொடுத்த தீரர். சிறுமை கண்டு பொங்கியவர். சீறுவோரைக் கண்டால் சீறு என்று புதிய வழிசொன்னவர். சீறுவோர்ச் சீறு என்பது பாரதியம். இதற்கு விளக்கப்பா வரையும் மாவிலிமைந்தன்,
ஓங்கிய அதிகாரம் – தலை
உச்சியில் ஏறிடும் இறுமாப்பு
தாங்கிய கயவர்களின் – சீற்றம்
தன்னையே கண்டுநாம் விழிமூடித்
தூங்கியே வாழுவதோ? – சீறித்
துடித்தெழுந் தெதிர்த்துமே போராடினால்
நீங்கிடும் கொடுமையெல்லாம்- நீண்டு
நிலைத்திடும் நீதியிந் நிலத்தினிலே! (பக்கம் 38)
என்று பாடியுள்ளமை இவரின் உள்ளம் காட்டும் உயரிய வரிகளாகும். இந்த நூலில் அமைந்துள்ள பாடல்கள் அறுசீர், எழுசீர், எண்சீர் பன்னிருசீர் விருத்தங்கள், கலிவெண்பா, நேரிசை வெண்பா, கலித்துறை, குறள்வெண்பா, ஈரடி வியனிலைச் சிந்து, நேரிசை ஆசிரியப்பா, கலிவிருத்தம், இயற்கும்மி, வெண்கலிப்பா, நொண்டிச்சிந்து, தரவுக்கொச்சகக் கலிப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, கிளிக்கண்ணிகள், குறள்வெண்செந்துறை முதலான யாப்பு வடிவங்களில் வெளிவந்துள்ள பாடல்கள் மாவிலி மைந்தனின் யாப்புப் புலமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.