சுலோச்சனா அருண்
சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூக மையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது.
‘பெண்கள், மற்றும் இளைய தலைமுறையினர் எழுதும் சமையற் குறிப்புகள், எமது பாரம்பரிய விளையாட்டுகள், உணவு வகைகள், பயணக்கட்டுரைகள், தாங்கள் பிறந்த மண் பற்றிய ஆக்கங்கள், கவிதைகள், சிறுகதைகள் மற்றும் தாயகம், கனடா பற்றிய செய்திகள் போன்றவை மிகவும் பயனுள்ளதாகவும், இங்குள்ள இளைய தலைமுறையினர் அவற்றை அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருப்பதால், வதனம் இதழ் சிறந்ததொரு இலக்கியப் பத்திரிகையாகக் கனடாவில் வெளிவருவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. புலம் பெயர்ந்த மண்ணில் எங்கள் மொழியையும், பண்பாட்டையும் தக்க வைப்பதற்கு உதவியாகவும், சிறப்பாகவும் வெளிவரும் இந்த ‘வதனம்’ இலக்கிய மஞ்சரி தொடர்ந்தும் நூல் வடிவில் எமக்கு வாசிக்கக் கூடியதாகக் கிடைப்பது எமது அதிஸ்டமே’ என்று திருமதி நாகேஸ்வரி சிறிகுமரகுரு அவர்கள் கனடாச் சிறப்பிதழின் அறிமுக உரையில் குறிப்பிட்டார்.
தமிழும் சைவமும் இரு கண்கள் என்பதால், இந்த நிகழ்வின் போது இன்றைய இளைய தலைமுறையினரின் தேவை கருதி ‘பக்தி இலக்கியத் தூறல்’ என்ற கைநூல் ஒன்றும் வெளியிடப்பட்டது. சிறுவர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு இந்த நூல் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இந்த நூலில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒளவையாரின் விநாயகர் வணக்கம், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் தேவாரங்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ், சேக்கிழரின்; பெரியபுராணம், கச்சியப்பரின் கந்தபுராணம், மாணிக்கவாசகரின் திருவாசகம், பாரதியார் பாடல், விபுலானந்தர் பாடல், சரசுவதி அந்தாதி, அபிராமி அந்தாதி, திருக்கோணேசுவர, திருக்கேதீசுவரப் பதிகம் ஆகியன இடம் பெறற்றிருக்கின்றன.
‘பெண்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் ஊடகத்துறையில் பயிற்சி அளிப்பதற்காக ‘வதனம்’ இதழை வெளியிடுகின்றோம். ‘பக்தி இலக்கியத் தூறலில்’ உள்ள தேவாரங்களைப் பாடமாக்கி தைப்பொங்கல் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்’ என்று வதனம் நிர்வாக ஆசிரியர் கமலவதனா சுந்தா அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வதனம் இதழின் பிரதம ஆசிரியரான பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களை, அவரது தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டி வதனம் இதழ் இணை ஆசிரியர்களான இளைய தலைமுறையினர் கௌரவித்திருந்தனர். அவர் தனது உரையில் ‘இளைய தலைமுறையினர் மிகுந்த ஆர்வத்தோடு ஊடகத்துறையில் ஈடுபடுவதையிட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றது. சிறுகதைப்பட்டறைப் பயிற்சி வகுப்புகளை நடத்தும்படி கேட்டிருந்தார்கள். அதை முன்னெடுத்ததன் விளைவாக அதில் பங்குபற்றிய ஆறு பேர் இதுவரை சிறுகதைகளை எழுதித் தந்திருக்கிறார்கள்;. ஏனையோரும் எழுதி முடித்ததும் ஒரு நூலாக வெளியிட்டுக் கனடிய தமிழ் பெண்களின் சிறுகதைத் தொகுப்பாகக் கனடியத் தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்ப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.