உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. இதில், ஏற்கனவே கடந்த மாதம் 9ம்தேதி, நீதிபதி ஹிமா கோலி ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு முதல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் டி.ஒய் சந்திரசூட் வருகின்ற நவம்பர் 11ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், அடுத்த மாதம் 11ம் தேதி முதல், அடுத்த ஆண்டு மே 13ம் தேதிவரை தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.